3 மாடிகள், 6 படுக்கையறைகள், 11 குளியலறை... ரூ. 201.1 கோடியில் வீடு வாங்கிய காமெடி நடிகர்!
வாஷிங்டன்: நகைச்சுவையாளர் ட்ரெவர் நோவா ரூ. 201.1 கோடி மதிப்பிலான வீட்டை வாங்கியுள்ளார். காமெடி சென்ட்ரல் என்கிற அமெரிக்க சேனலில் 'தி டெய்லி ஷோ' என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மற்றும் எழுத்தாளர் ட்ரெவர் நோவா. 'தி டெய்லி ஷோ'வில் அரசியல், சினிமா உட்பட பல தலைப்புகளில் நையாண்டி பேசுவது நோவாவின் வழக்கம். இதன் மூலம் அவர் சர்வதேசப் புகழை அடைந்திருக்கிறார்.
2021 கிராமி விருதுகள் விழாவை நோவாதான் தொகுத்து வழங்குகிறார். கொரோனா நெருக்கடி காரணமாக 'தி டெய்லி ஷோ' நிகழ்ச்சியைத்தான் இருந்த இடத்திலிருந்தே தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பெல் ஏர் பகுதியில், 11,000 சதுர அடி அளவிலான பிரம்மாண்ட வீடு ஒன்றை ட்ரெவர் நோவா வாங்கியுள்ளார்.
ஜப்பானியக் கட்டிடக் கலையின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு அடுக்கி வைக்கப்பட்ட பெட்டிகளைப் போன்ற அமைப்பைக் கொண்டது. 3 மாடிகள், 6 படுக்கையறைகள், 11 குளியலறைகள், லிஃப்ட், ஸ்பா, சின்ன திரை அரங்கம், நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகளை இந்த வீடு கொண்டுள்ளது. 40 வயதான மின்கா கெல்லியுடனான ட்ரெவர் நோவாவின் காதல் தீவிரமாகத் தொடர்ந்து வருவதால் இருவரும் சேர்ந்து இந்த வீட்டில் வசிப்பார்கள் என்று கூறப்படுகிறது.