மத நம்பிக்கைகளை காயப்படுத்துகிறது சைப் அலி கானின் தாண்டவ் வெப் தொடருக்கு எதிர்ப்பு
பாலிவுட் முன்னணி நடிகர் சைப் அலி கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தாண்டவ் வெப் தொடர், இந்து மத நம்பிக்கைகளை காயப்படுத்துகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து இந்த தொடரை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் இந்த தொடர் சமீபத்தில் தான் வெளியானது. தற்போது வெப் தொடர் சீசன் நடைபெற்று வருகிறது. டிவிக்களிலும், ஓடிடி தளங்களிலும் வெப் தொடர்கள் மிகவும் பிரபலமாகி வருகிறது. பல முன்னணி நட்சத்திரங்கள் கூட இதில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட் முன்னணி நடிகர் சைப் அலி கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தாண்டவ் என்ற வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் சைப் அலி கானுடன் முகமது சீஷன் அயூப், டிம்பிள் கபாடியா, சுனில் குரோவர் கிருத்திகா கம்ரா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த வெப் தொடர் இந்து மத நம்பிக்கைகளை காயப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இந்த தொடரை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக #Bantandavnow என்ற ஹாஷ்டாக் சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பாஜக தலைவரான கபில் மிஸ்ரா, இந்த தொடர் தலித்துகளுக்கு எதிரானது என்றும், இந்துக்களுக்கு எதிரான மதவெறியைத் தூண்டும் வகையில் உள்ளது என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே பிரபாசுடன் சைப் அலி கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆதி புருஷ் என்ற படம் தொடர்பாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. ராவணன் கதாபாத்திரத்தை குறித்து ஒரு பேட்டியின் போது சைப் அலி கான் சில தவறான கருத்துகளை தெரிவித்ததாக கூறி ஒரு சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சமூக இணையதளங்களில் சைப் அலி கானுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தன்னுடைய கருத்துக்கு பின்னர் அவர் மன்னிப்பு கேட்டார்.