ஆஸ்திரேலியா 294 ரன்களில் ஆட்டமிழந்தது 327 ரன்கள் முன்னிலை இந்தியா வெற்றி பெறுமா?

ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 294 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இந்தியாவுக்கு 328 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்பேனில் நடைபெற்றுவரும் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 369 ரன்கள் குவித்தது. இந்த அணியில் லபுஷேன் சிறப்பாக ஆடி 108 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்தபடியாக கேப்டன் டிம் பெய்ன் 50 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் சிறப்பாக ஆடவில்லை. இந்திய தரப்பில் ஷார்துல் தாகூர், நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். சிராஜ் ஒரு விக்கெட்டை சாய்த்தார். இதன் பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது.

முன்னணி வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ந்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில், புதுமுக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷார்துல் தாக்கூர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 336 ரன்கள் சேர்த்தது. வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களிலும், ஷார்துல் தாக்கூர் 67 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதற்கு அடுத்த படியாக ரோகித் சர்மா மட்டும் தான் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரகானே, புஜாரா, மாயங்க் அகர்வால் மற்றும் ரிஷப் பந்த் உள்பட ஒருவரும் சிறப்பாக ஆடவில்லை. இதன் பின்னர் 33 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 294 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மட்டுமே அரைசதத்தை கடந்தார். இவர் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் 48 ரன்களிலும், ஹாரிஸ் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் முகம்மது சிராஜின் பந்துவீச்சு மிக அற்புதமாக இருந்தது. இவர் 73 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதற்கு அடுத்தபடியாக ஷார்துல் தாக்கூர் 61 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 328 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியுள்ளது. ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கியுள்ளனர். இந்தியா 4 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் மீண்டும் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

More News >>