அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடம்? அமித்ஷாவுடன் எடப்பாடி சந்திப்பு..

முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். பிரதமரை சந்திக்கும் அவர், அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. இம்முறையும் அதே கூட்டணி தொடரும் என்று அதிமுக தரப்பில் கூறி வருகின்றனர். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னையில் அரசு விழாவில் பங்கேற்ற போது பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூறினார்கள். ஆனாலும், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. தற்போது எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள பாஜக முன்வந்துள்ளது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஜன.18) காலை 11 மணிக்கு டெல்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். அவர் டெல்லியில் பிரதமர் மோடியை நாளை காலை 10.30 மணி்க்கு சந்தித்து பேசுகிறார். அப்போது அவர் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கான நிதியுதவி உள்பட பல்வேறு அரசு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்குமாறு கோரிக்கை விடுக்கிறார். மேலும், வரும் 27ம் தேதியன்று ஜெயலலிதா நினைவிடத்தை திறக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு பிரதமர் மோடியை அழைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதிமுக-பாஜக கூட்டணி குறித்தும் அவர் பேசுவார் என்று தெரிகிறது. முன்னதாக, இன்று இரவு 7.30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். அப்போது அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் என்றும், மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு இடங்கள் என்றும் தோராயமாக முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, பாஜக முக்கிய தலைவர்கள் சென்னை வந்து கூட்டணி குறித்த அறிவிப்புகளை முறைப்படி வெளியிடுவார்கள் என்றும் பேச்சு அடிபடுகிறது. பாஜக 60 தொகுதிகள் கேட்டு வரும் நிலையில், அதற்கு 25 இடங்கள் தரப்படும் என கூறப்படுகிறது. பாமகவுக்கு 23, தேமுதிகவுக்கு 20 தொகுதிகள் என்று அதிமுக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. வரும் 27ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. அவருக்கு ஓசூரில் இருந்து சென்னை வரை பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க அ.ம.மு.க திட்டமிட்டிருக்கிறது. இந்த செய்தியை இருட்டடிப்பு செய்வதற்காகவே அதே நாளில் ஜெயலலிதா நினைவிடத்தை பிரதமர் மோடியை அழைத்து திறப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்மானித்ததாகவும் பேச்சு அடிபடுகிறது.

More News >>