ஜன.27ம் தேதி சசிகலா விடுதலையாவது உறுதி.. அதிமுகவில் பரபரப்பு..
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இதனால், அதிமுகவில் என்ன மாற்றம் வருமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2வது குற்றவாளியாக தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் முதல்வர் ஜெயலலிதா மறைந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்றிருந்தார். அப்போது, சசிகலாவை அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக பொதுக் குழு தேர்வு செய்தது. ஓ.பன்னீர்செல்வம் 2018ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி பதவி விலகினார். மறுநாள், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூடி, சசிகலாவை முதலமைச்சராக தேர்வு செய்தனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார்.
அவருக்கு ஆதரவாக 12 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சென்றனர். ஆனால், சசிகலா தலைமையில் மற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூவத்தூர் ரிசார்ட்டில் அணிவகுத்தனர். திடீர் திருப்பமாக சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இதையடுத்து, தனக்கு பதிலாக எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்து விட்டு சசிகலா, பெங்களூரு சிறைக்கு சென்றார். தற்போது அவர் வரும் 27ம் தேதியன்று விடுதலையாக உள்ளார். ஏற்கனவே இந்த தேதியில் அவர் விடுதலை ஆவார் என்று ஆர்.டி.ஐ. தகவலில் கூறப்பட்டிருந்தாலும் அவரை விடுவிப்பார்களா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் எழுந்தது. இந்நிலையில், சசிகலா அபாரதத் தொகையை செலுத்தியதைத் தொடர்ந்து அவரை ஜன.27ம் தேதி விடுதலை செய்வதற்கான ஆவணங்களை சிறை நிர்வாகம் தயாரித்துள்ளது.
எனவே, அவர் வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இளவரசி வரும் பிப்ரவரி 5ம் தேதி விடுதலையாகிறார். ஆனால், சுதாகரன் இன்னும் 10 கோடி அபாரதத்தை செலுத்தாததால் அவர் விடுதலை தாமதமாகும் என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, சசிகலாவையும், தினகரனையும் அதிமுகவில் சேர்த்து கொள்ள வேண்டுமென்று பாஜக நிர்ப்பந்திப்பதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட சிலர் ஆதரவாக உள்ளனர். ஆனால், எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களாக மாறியுள்ள கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் அதை எதிர்ப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், சசிகலா வருகையால் அதிமுகவில் சலசலப்பு ஏற்படும் என்பதில் சந்தேகம் இ்ல்லை.