மத உணர்வை புண்படுத்திய நடிகை மீது புகார் விளைவுகளை எதிர்கொள்ள தயாராகுங்கள் பாஜக எச்சரிக்கை

இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி பிரபல பெங்காலி நடிகைக்கு எதிராக அசாம், பெங்களூரு மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்று அந்த நடிகைக்கு மேற்கு வங்க மாநில பாஜக தலைவரும், முன்னாள் மேகாலயா கவர்னருமான ததாகத ராய் எச்சரித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சாயோனி கோஷ். பிரபல நடிகையான இவர், ஏராளமான பெங்காலி படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்துள்ளார். இவர் பாடகியாகவும் உள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய டுவிட்டரில் இந்துமத கடவுள் சிவன் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநில பாஜக தலைவரும், மேகாலயா மாநில முன்னாள் கவர்னருமான ததாகத ராய், நடிகை சாயோனி கோஷுக்கு எதிராக மேற்கு வங்க மாநில ரபீந்திர சரோவர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில், நடிகை சாயோனி கோஷ் இந்து மத உணர்வுகளை புண்படுத்தி உள்ளார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் அவர் கூறியிருப்பது: நடிகை சாயோனி கோஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்து சிவபக்தனான நான் உட்பட பலரது மனதை புண்படுத்தி உள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் இதுதொடர்பாக ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரிலும் நடிகைக்கு எதிராக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக ஏற்படும் விளைவுகளை சந்திக்க அவர் தயாராக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதை நடிகை சாயோனி கோஷ் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டரில் கூறியிருப்பது: 2010 முதல் நான் டுவிட்டரை பயன்படுத்தி வருகிறேன். ஆனால் 2015 ல் எனக்கு விருப்பம் இல்லாததால் டுவிட்டர் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டேன். தற்போது என்னுடைய டுவிட்டர் கணக்கை ஹேக் செய்துள்ளனர். இந்த கருத்து 2015ல் வேறு யாரோ வெளியிட்டதாகும். இதில் நான் எந்த தவறும் செய்யவில்லை. என்னுடைய டுவிட்டர் கணக்கை சரி செய்ய முயற்சி செய்து வருகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

More News >>