இனிமே காதல் நாயகன் கிடையாது.. ஹீரோ திடீர் முடிவு..
பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் ஆக்ஷன் ஹீரோக்கள் என்றால் எம்ஜிஆர், ஜெய் சங்கர், ரவிச்சந்திரன் போன்ற ஒரு சிலர் இருந்தனர். நடிப்பு, காதல், குணசித்ரம் என்றால் சிவாஜி, ஜெமினிகணேசன், முத்துராமன் போன்றவர்கள் இருந்தனர். இவர்கள் எல்லோருமே தங்களது கதாபாத்திரங்களில் சாதனை படைத்தார்கள். அதன்பிறகு வந்த ரஜினி ஆக்ஷன் ஹீரோவாகவும் கமல்ஹாசன் நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். இன்றைய காலகட்டத்தில் எல்லா ஹீரோக்களுமே ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமே நடிக்க விரும்புகின்றனர். ஒரு அடி அடித்தால் வில்லன் அந்தரத்தில் பில்டிங் உயரத்துக்கு பறந்து கீழே விழ வேண்டும் என்று எண்ணி சண்டை காட்சிகளில் ஹீரோக்கள் நடிக்கின்றனர். ஆனால் அது பல ஹீரோக்களுக்கு அது ஒர்கவுட் ஆகவில்லை.
ஆனாலும் முயற்சியை தொடர்கிறார்கள். தெலுங்கு தமிழ் படங்களில் பிரபலமானவர் விஜய தேவர கொண்டா. இவர் நடித்த கீதா கோவிந்தம், அர்ஜூன் ரெட்டி, டியர் காம்ரேட் போன்ற காதல் படங்கள் அவரை இளவட்டங்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது. தற்போது அவருக்கு ஆக்ஷன் ஹீரோ ஆசை வந்திருக்கிறது. கடைசியாக அவர் தி வேர்ல்டு பேமஸ் லவர் என்ற படத்தில் நடித்தார். இது தமிழிலும் வெளியானது, ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதையடுத்து அவர் ஆக்ஷன் ஹீரோவாக முடிவு செய்திருக்கிறார். பல்வேறு ஆக்ஷன் அதிரடி படங்களை இயக்கி அளித்த புரி ஜெகநாத் இயக்கும் படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். இது அதிரடி ஆக்ஷன் கதையாக உருவாகிறது. இப்படத்துக்காக தனது உடல் தோற்றத்தை கட்டுமஸ்தாக்க கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டார். இப்படத்தை புரி ஜெகநாத், நடிகை சார்மி இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் 40 நாட்கள் நடந்தது. கொரோனா ஊரடங்கால் இதன் படப்பிடிப்பு தடைபட்டது. இப்படத்துக்கு தற்காலிகமாக பைட்டர் என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிகாரப் பூர்வமாக டைட்டிலும் ஃபர்ஸ்ட்லுக்கும் வெளியிடப்பட்டது. பாக்ஸர் போல் கையில் கிளவுசுடன் முரட்டுத்தனமாக விஜய் தேவரகொண்டா ஆக்ஷன் காட்டியிருக்கும் படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்துக்கு லைகர் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. லைகர் என்பது சிங்கத்துக்கும், பெண் புலிக்கும் பிறந்த கலப்பின குட்டியாகும். முரட்டு குணம் கொண்டது. இதில் ஹீரோயினாக அனன்யா பாண்டே நடிக்கிறார். இவர் இந்தியில் ஸ்டுடண்ட் ஆப் த இயர்2, பதிபத்னி அவுர் வோ போன்ற படங்கள்ல் நடித்தவர். இப்படத்தை இந்தியில் கரண் ஜோஹர் தயாரிக்க உள்ளார்.