எம்ஜிஆர் தோட்டத்தில் கமல் தொடங்கிய படம்.. ஜூனியர் ராமச்சந்திரன் நடிக்கிறார்..

மறைந்த தமிழக முதல்வர் புரட்சிதலைவர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஜூனியர் எம்.ஜி.ஆர் வி. ராமச்சந்திரன் நடிக்கும் 'கேங்ஸ்டர் 21' படப்பிடிப்பை உலகநாயகன் கமல்ஹாசன் கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார். இந்தப் படத்தை 'அட்டு 'படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா இயக்குகிறார். ஏ டி ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் எம்.என். வீரப்பன் தயாரிக்கிறார். இதில் ஹீரோயினாக ராய்லட்சுமி நடிக்கிறார். எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி எம்ஜிஆர் வாழ்ந்த இல்லம் இருக்கும் ராமாவரம் தோட்டத்திற்கு வருகைதந்த கமல்ஹாசன், அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்' கேங்ஸ்டர் 21' படப் பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

அதுமட்டுமல்ல இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் அவர் வெளியிட்டார். ஜூனியர் எம்ஜிஆர் வி. இராமச்சந்திரன் நடிக்கும் இப்படத்தை உலகநாயகன் தொடங்கி வைத்தது குறித்து பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு. இப்படம் சென்னையில் நிழல் உலக தாதாவாக இருந்த ஒருவரின் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. இதற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார். விக்ரம் இசை அமைக்கிறார், ஸ்டன்னர் சாம் சண்டையிற்சி அளிக்கிறார். ஆனந்த் அரங்கம் அமைக்கிறார். இதில் இணைந்துள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஏற்கெனவே சில படங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள்.

திறமையுள்ள இளைஞர்களின் கூட்டு முயற்சியில் இப்படம் உருவாகிறது. அந்தமானிலிருந்து தனது தந்தையை சந்திக்க வரும் ஹீரோ எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் உள்ள ரவுடி கூட்டத்தால் பாதிக்கப்படுகிறார். அந்த சம்பவம் ஹீரோ வாழ்கையை திருப்பிப்போடுகிறது. இதை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் ரத்தன் தான் இயக்கும் மற்ற படங்களின் இறுதிகட்ட பணிகளை முடிப்பதிலும் பிஸியாக இருக்கிறார். டான் வேடத்தில் நடிக்க பிரபல நடிகர் ஒருவரிடம் பேசி வருகிறாராம்.

More News >>