மழையால் மீண்டும் ஆட்டம் பாதிப்பு இந்தியா வெற்றி பெற இன்னும் 324 ரன்கள் தேவை
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் இன்று 2 முறை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இன்று ஆட்டநேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது. ஒரு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இந்தியா வெற்றி பெற இன்னும் 324 ரன்கள் எடுக்க வேண்டும். இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பிரிஸ்பேனில் தொடங்கிய 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 369 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷார்துல் தாக்கூர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 336 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 33 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா தன்னுடைய 2வது இன்னிங்சை தொடங்கியது. முகமது சிராஜ் மற்றும் ஷார்துல் தாக்கூர் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா 294 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
முகமது சிராஜ் மிக அற்புதமாக பந்துவீசி 19.5 ஓவர்களில் 73 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். டெஸ்டில் அறிமுகமான 2வது போட்டியிலேயே ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதேபோல் தாக்கூரும் சிறப்பாக பந்து வீசினார். இவர் 19 ஓவர்களில் 61 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இவர்கள் இருவரது சிறப்பான பந்து வீச்சினால் மட்டுமே ஆஸ்திரேலியாவை 300 ரன்களுக்குள் ஆட்டமிழக்க வைக்க முடிந்தது. இதற்கிடையே தேநீர் இடைவேளைக்குப் பின்னர் மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் 328 என்ற வெற்றி இலக்குடன் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர். 2வது ஒவரில் 5வது பந்தை வீசிய போது மீண்டும் மழை குறுக்கிட்டது. அப்போது இந்தியா விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்திருந்தது. போட்டி நேரம் முடியும் வரை மழை தொடர்ந்ததால் ஆட்டத்தை பின்னர் தொடர முடியவில்லை. நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 324 ரன்கள் எடுக்க வேண்டும். கைவசம் அனைத்து விக்கெட்டுகளும் பத்திரமாக உள்ளன. முதல் நிலை ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினால் நாளை இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. தற்போது டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும், டிரா செய்தாலும் பார்டர், கவாஸ்கர் கோப்பையை இந்தியா தக்க வைத்துக்கொள்ளும்.