பழைய பஸ் பாஸ் வைத்திருந்தால் போதும், இலவசமாக பயணம் செய்யலாம்!

தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்தின் அடிப்படையில், பெரும்பாலான பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்த நிலையில் இன்று முதல் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இன்று முதல் 10 மற்றும் 12 வகுப்பினருக்குப் பள்ளிகள் திறக்கப்படுவதால் அந்த மாணவர்களின் பேருந்து பயண அட்டைகள் புதுப்பிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது. இதனால் பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் பழைய பேருந்து பயண அட்டை மற்றும் சீருடை அணிந்து இருந்தாலே போதும் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில் மின்சார பேருந்து திட்டமானது, கொரோனா காலம் என்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எந்த காரணத்தைக் கொண்டும் திட்டம் நிராகரிக்கப்படாது எனவும், இந்த திட்டத்திற்காக ஜெர்மன் கே.எப்.டபுள்யூ வங்கியில் இருந்து கடன் பெறப்பட்டு, மின்சார போக்குவரத்து திட்டம் மற்றும் பி.எஸ்6 ரக வாகனம் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

More News >>