கேரள அரசின் பம்பர் லாட்டரி ₹12 கோடி தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கா?
கேரள அரசின் கிறிஸ்துமஸ், புதுவருட லாட்டரி பம்பர் குலுக்கலில் முதல் பரிசான ₹ 12 கோடி தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள ஆரியங்காவில் விற்பனையாகி உள்ளது. இப்பகுதிக்குத் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் செல்வதால் தமிழகத்தைச் சேர்ந்த யாருக்காவது பரிசு விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது.கேரளாவில் தற்போது அரசு லாட்டரி குலுக்கல் மட்டுமே நடைபெற்று வருகிறது. தனியார் லாட்டரிகளுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் தடை விதிக்கப்பட்டது.
கிறிஸ்மஸ், புது வருடம், ஓணம், சித்திரை விஷு உள்பட பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு பம்பர் லாட்டரி குலுக்கல் நடத்தப்படுவது உண்டு. இவ்வருட கிறிஸ்துமஸ், புதுவருட பம்பர் லாட்டரி முதல் பரிசாக ₹ 12 கோடி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த டிக்கெட் விலை ₹ 300 ஆகும். முதல் பரிசு ₹12 கோடி என்பதால் மிகவும் பரபரப்பாக டிக்கெட் விற்பனையானது. மொத்தம் 33 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டன. அனைத்து டிக்கெட்டுகளுமே விற்பனையாகி விட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை மூலம் அரசுக்கு கேரள ₹ 90 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது.
இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் இந்த பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. திருவனந்தபுரம் நகரத்தின் புதிய மேயரான ஆர்யா ராஜேந்திரன் தலைமையில் குலுக்கல் நடைபெற்றது.இதில் XG 358753 என்ற டிக்கெட்டுக்கு முதல் பரிசான ₹ 12 கோடி கிடைத்துள்ளது. இந்தக் முதல் பரிசுக்குரிய டிக்கெட் தமிழக-கேரள எல்லையில் உள்ள ஆரியங்காவில் விற்பனையாகி உள்ளது. இது நெல்லை மாவட்ட எல்லையான செங்கோட்டையை ஒட்டி உள்ள பகுதியாகும். தென்காசியைச் சேர்ந்த ஒருவர் ஆரியங்காவில் லாட்டரி கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் தான் இந்த டிக்கெட் விற்பனையாகி உள்ளது. தற்போது சபரிமலை சீசன் என்பதால் இந்த வழியாகத் தினமும் ஏராளமான பக்தர்கள் சபரிமலை சென்று வருகின்றனர்.
கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் இந்த கடையில் லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளனர். எனவே தமிழகத்தைச் சேர்ந்த யாருக்காவது தான் இந்த முதல் பரிசு கிடைத்து இருக்கும் எனக் கருதப்படுகிறது. அந்த மகா கோடீஸ்வர அதிர்ஷ்டசாலி யார் என்று இதுவரை தெரியவில்லை. முதல் பரிசு கிடைத்த அந்த அதிர்ஷ்டசாலியை லாட்டரி கடை உரிமையாளர் தேடி வருகிறார். முதல் பரிசு விழுந்தவருக்கு ஏஜென்ட் கமிஷன் மற்றும் வரி நீங்கலாக ₹ 7.56 கோடி கிடைக்கும்.