வேளாண் சட்டங்கள் குறித்து பஞ்சாப் வந்து விளக்கம் அளித்தால் போதும்: நடிகை ஹேமமாலினிக்கு விவசாயிகள் கடிதம்.!!!
டெல்லி: பஞ்சாப் மாநிலம் வந்து மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்த விளக்கம் அளிக்க நடிகை ஹேம மாலினிக்கு விவசாயிகள் கடிதம் எழுதியுள்ளனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்கள், மத்திய அரசுடன் இதுவரை 9 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. அவை தோல்வியில் முடிந்தன. நாளை 10ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே, விவசாயிகள் போராட்டடம் தொடர்பாக கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நாடாளுமன்ற தொகுதி பாஜக உறுப்பினரும் நடிகையுமான ஹேம மாலினி, அவர்களுக்கு என்னதான் வேண்டும் என தெரியவில்லை.
எந்தவித முகாந்திரமும் இல்லாமல் போராடுகின்றனர். எதிர் கட்சிகளின் பேச்சை கேட்டுக் கொண்டு இப்படி செயல்படுவதை போலத் தெரிகிறது என்று தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், இதற்கு பதிலளிக்கும் விதமாக ஹேம மாலினிக்கு காந்தி கிசான் சங்கர்ஷ் விவசாய குழு கடிதம் எழுதியுள்ளது. கடிதத்தில், உங்களது வார்த்தைகள் எங்களை அதிகமாக காயப்படுத்தி விட்டன. சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த போராட்ட களத்தில் உயிரிழந்துள்ளனர்.
எங்களது விளைச்சலுக்கு உரிய விலை கேட்பது தவறா. கஷ்டப்பட்டு உழைக்கும் விவசாயிகள், வியாபாரிகள் கேட்கின்ற கட்டுப்படியாகாத விலைக்கு பொருட்களை கொடுக்க வேண்டுமா? எங்களுக்கு எதுவும் தெரியாமல் போராடுகிறோம் என சொல்லி இருந்தீர்கள். தயவு செய்து பஞ்சாப் மாநிலம் வந்து மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்கள் குறித்து தெளிவான விளக்கத்தை எங்களுக்கு கொடுத்து விட்டு செல்லுங்கள், பயணத்திற்கான மொத்த செலவுகளையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் குறிப்பிட்டுள்ளனர்.