ஆஸ்திரேலியாவை அலறவிட்ட சிராஜ்!
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்ற சிராஜ் தனது ஆறாவது இன்னிங்சில் மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார். இந்திய, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா ஆடுகளத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 369/10 சேர்த்து ஆட்டமிழந்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 336/10 ரன்களை சேர்த்து 33 ரன்கள் பின்னடைவு அடைந்தது.
ஆஸ்திரேலியா அணி 33 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலியா அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களான லபுஷேன் மற்றும் சுமித் இருவரும் நிலைத்து நின்று ஆட தொடங்கினர். இவர்கள் அணியின் ரன்ரேட்டை உயர்த்து ஆட்டத்தின் ஆகஸ்லேட்டரை போட, அதற்கு வேகத்தடை மோட்டார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ். இவர் ஆஸ்திரேலியா அணியின் லபுஷேன் (25), சுமித்(55), வடே (0), ஸ்டார்க் (1) மற்றும் ஹேசல்வுட் (9) என ஐந்து விக்கெட்டுகளை தனது 19.5 ஓவர்களில் 73 ரன்களை விட்டுக்கொடுத்து எடுத்து அசத்தினார்.
சிராஜ்ஜிக்கு இது முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம், மேலும் இதுவே தனது முதல் தொடரும் கூட, இது வரை இந்த ஆடுகளத்தில் 5 விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சாளர்கள் ஜாகீர்கான்(2003) மற்றும் மதன் லால்(1977) ஆவார். அந்த வகையில் மூன்றாவது வீரராக இந்த பட்டறையில் இணைந்துள்ளார் சிராஜ்(2021). மேலும் ஆஸ்திரேலியா மண்ணில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 12 வீரர்கள் பட்டியலில் 13 வது வீரராக இணைந்து அசத்தியுள்ளார் 26 வயதாகும் சிராஜ். இந்த பட்டியலில் 5 முறை இந்த சாதனையைப் படைத்து முதல் இடத்தில் அசராமல் அமர்ந்துள்ளார் கபில்தேவ்.
சிராஜ் இந்த தொடரில் இந்திய அணி சார்பில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்களை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். சிராஜ் சில தினங்களுக்கு முன் மனரீதியான தாக்குதலுக்கு உட்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதனை சாதுரியமாகக் கையாண்டு அவர்களுக்குத் தனது பதிலைப் பந்து வீச்சின் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் இவர் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.