சென்னை துறைமுகத்தில் போர்க்கப்பலை காண குவிந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்

சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள போர்க்கப்பல்களை காண நேற்று ஆர்வமுடன் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். இதனால், சென்னை துறைமுகம் கடல் போல் காட்சியளித்தது.

சென்னையை அடுத்து திருவிடந்தை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி இந்திய ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதையடுத்து, சென்னை துறைமுகத்தில் சுமித்ரா, ஷயாத்ரி, கமோர்டா, ஐராவத் ஆகிய 4 போர்க்கப்பல்கள் பொது மக்களின் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த கப்பல்கள் கடந்த (13.4.2018)ம் தேதி முதல் இன்று (15.04.2018) வரையில் பொது மக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால், அனுமதிக்கப்பட்ட முதல் நாள் அன்றே மக்கள் கூட்டம் குவிந்தது. இதனால், இரண்டாவது நாளான நேற்று கூடுதலாக குக்ரி என்ற போர்க்கப்பலை பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, நேற்று அதிகாலை முதலே சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரம் பேர் குவிந்தனர்.

பல வகை போர்க்கப்பல்களை குழந்தைகள் நேரில் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். கேமராக்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றாலும், செல்போன்களை எடுத்து செல்ல அனுதிக்கப்பட்டதால் அனைவரும் ஆர்வமாக கப்பல்கள் முன்னே செல்பி எடுத்துக் கொண்டனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழ் புத்தாண்டு என்பதால் இன்று (நேற்று) பொது மக்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால், நேற்றைவிட இன்று கூடுதலாக 20 மாநகர பேருந்துகள் வரவழைக்கப்பட்டன. நாளை (இன்று) ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 40 மாநகர பேருந்துகள் கேட்டுள்ளோம்.

அதன்படி, இன்று (நேற்று) மாலை 5 மணி நிலவரப்படி போர்க்கப்பல்களை காண 30 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். இந்த எண்ணிக்கை நாளை (இன்று) மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>