ரஜினி படம் போல் மோஷன் கேப்சரில் நடக்கும் ஷூட்டிங்.. படம் வெளியிட்ட பிரபல நடிகர்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 2013 காலகட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு வெளிநாட்டில் சென்று சிகிச்சை பெற்றார். மாதக் கணக்கில் மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப் பட்டது. அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் மாற்றுச் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன் பிறகு அவர் படத்தில் நடிக்காமல் சில காலம் ஓய்வில் இருந்தார். அந்த நேரத்தில் படப்பிடிப்பு தளத்துக்குச் செல்லாமல் டிஜிட்டல் ஸ்டுடியோவில் இருந்தபடி நடிக்கும் 3டி மோஷன் கேப்சர் பாணியில் படமான கோச்சடையான் படத்தில் நடித்தார்.
இப்படத்தை அவரது மகள் சவுந்தர்யா இயக்கினார். கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வை பொறுப்பு ஏற்றார். இதில் வந்த சண்டைக் காட்சிகளின் போது ரஜினிக்குப் பதிலாக நடிகர் லொள்ளு சபா ஜீவா ரஜினிக்குப் பதிலாக டூப் போட்டு நடித்தார். தற்போது மற்றொரு பிரமாண்ட படம் மோஷன் கேப்சர் முறையில் படமாகிறது. பாகுபலி நடிகர் பிரபாஸ் நடிக்கும் படம் ஆதி புருஷ். ராமாயணத்தை மையமாக வைத்து புராணக் கதை வடிவில் உருவாகிறது. இதில் ராமராக பிரபாஸ் நடிக்கிறார். ராவணனாக இந்தி நடிகர் சயீப் அலிகான் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மோஷன் கேப்சர் முறையில் தொடங்குவதற்கான பணிகள் ஸ்டுயோவில் தொடங்கி இருப்பதாக பிரபாஸ் தெரிவித்திருக்கிறார். இப்படத்தில் பிரபாஸ் குறைந்த நாட்கள் மட்டுமே நடிக்க உள்ளார். படத்தின் பெரும்பகுதி மோஷன் கேப்சர் முறையில் உருவாகிறது. பிப்ரவரி 2ம் தேதி இதன் உத்தேச படப் பூஜை நடக்க உள்ளது. ஓம் ரவுத் இயக்குகிறார். பிரசாந்த் பூஷண், பிரசாட் சுதர், ராஜேஷ் நாயர், ஓம் ரவுத் இணைந்து தயாரிக்கின்றனர்.இதற்கிடையில் பிரபாஸ் ராதே ஷ்யாம் படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது. கே ஜி எஃப் ஹீரோ யஷ் நேரில் கலந்துகொண்டு பிரபாஸுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் நாக் அஸ்வின் படமொன்றிலும் பிரபாஸ் நடிக்கவிருக்கிறார்.