இந்தியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற பிரிஸ்பேன் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று பார்டர், கவாஸ்கர் கோப்பையை இந்தியா மீண்டும் கைப்பற்றியது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிட்னியில் நடந்த 3வது போட்டி இந்திய வீரர்களின் அபார ஆட்டத்தால் டிராவில் முடிவடைந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
இந்நிலையில் 4வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் தொடங்கியது. டாசில் வெற்றிபெற்று முதலில் ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலியா, 363 ரன்கள் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 33 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா, 2-வது இன்னிங்சில் சிராஜ் மற்றும் ஷார்துல் தாக்கூரின் அபாரமான பந்து வீச்சால் 294 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து 328 என்ற வெற்றி இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் சிறப்பாக ஆடிய சுப்மான் கில் 91 ரன்களிலும், புஜாரா 56 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து கேப்டன் ரகானே 24 ரன்களிலும், மாயங்க் அகர்வால் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அற்புதமாக ஆடி ரன்கள் குவித்தார்.
முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய வாஷிங்டன் சுந்தரும் தன் பங்குக்கு மிகச் சிறப்பாக ஆடினார். அவர் 29 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து லியோனின் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியாவுக்கு வெற்றி பெற 4 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. இதன்பிறகு ரிஷப் பந்துடன் முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய ஷார்துல் தாக்கூர் ஜோடி சேர்ந்தார். அவர் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு நவ்தீப் செய்னி களமிறங்கினார். இறுதியில் இந்தியா வெற்றி இலக்கை எட்டி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இதன் மூலம் பார்டர், கவாஸ்கர் கோப்பையை தொடர்ந்து 2வது முறையாக இந்தியா கைப்பற்றியது. ரிஷப் பந்த் 89 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.