அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்கவே முடியாது.. முதலமைச்சர் திட்டவட்டம்..

சசிகலா விடுதலையாகி வந்தாலும் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2வது குற்றவாளியாக தண்டனை பெற்ற சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். அவர் வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளார். இதையடுத்து, அதிமுகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசும் போது, சசிகலா வெளியே வந்தாலும் அவரால் கட்சியில் ஒன்றும் ஆகப் போவதில்லை. அவருக்கே ஆயிரத்தெட்டு பிரச்னை இருக்கிறது என்று குறிப்பிட்டார். ஆனால், அடுத்த 2 நாட்களில் முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திரா, சென்னையில் ஒரு ஆர்பாட்டம் நடத்தினார். அப்போது அவர், சசிகலாவை அம்மாவுடன் சேர்ந்து தவவாழ்க்கை வாழ்ந்தவர் என்று புகழ்ந்தார்.

இந்த கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், அதிமுகவில் கோகுல இந்திரா உள்பட யாராக இருந்தாலும், சசிகலாவுக்கு ஜால்ரா அடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைப்பது நல்லதல்ல. சசிகலாவை ஒருபோதும் கட்சி ஏற்றுக் கொள்ளாது என்றார். அதே போல், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் வழக்கம் போல் சசிகலாவுக்கு ஆதரவாக மீண்டும் பேசியுள்ளார். ஒரு வார பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், எங்களுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் இடையே பங்காளிச் சண்டைதான் நடக்கிறது.சின்னம்மா(சசிகலா) வெளியே வந்ததும், எல்லோருமே ஒன்றிணைய வாய்ப்பு உள்ளது. சசிகலா அ.தி.மு.க.வை பலப்படுத்தும் முடிவைத்தான் எடுப்பார் என்று தெரிவித்திருந்தார். இதற்கும் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பதில் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், ராஜேந்திர பாலாஜி தெளிவில்லாமல் இருக்கிறார். அதிமுகவுக்கும், டி.டி.வி,க்கும் இடையே அண்ணன் தம்பி பிரச்சினை என்று எப்படி சொல்லலாம்?

இரட்டை இலை சின்னத்தை முடக்க முயன்ற தினகரனுடன் எந்த உறவும் இல்லை என்றார். இதற்கிடையே, துக்ளக் ஆண்டு விழாவில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி பேசும் போது, அதிமுகவை பலப்படுத்த சசிகலாவையும் சேர்த்து கொள்ள வேண்டும் என்று கூறினார். இதற்கும் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். இந்த சூழலில்தான், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று(ஜன.18) டெல்லி சென்றிருந்தார். இந்த முறை அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் சென்றிருந்தார். முதலமைச்சர் நேற்றிரவு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். முக்கால் மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவே முடியாது என்றும், அவரையும், டி.டி.வி. தினகரனையும் கட்சியில் சேர்த்தால் குழப்பம் ஏற்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். இதை அமித்ஷாவும் ஏற்றுக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து இன்று(ஜன.19) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். அவரிடமும் அதே கருத்தைக் கூறியுள்ளார். பிரதமரும், அமித்ஷாவும் முதலமைச்சரின் கருத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பிரதமரை சந்தித்த பின்பு, டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சசிகலா விடுதலையாகி வருவதால், அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது. சசிகலா விடுதலையாகி வெளியே வந்தாலும், அதிமுகவில் சேருவதற்கு நூறு சதவீதம் வாய்ப்பே இல்லை. ஜெயல‌லிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் ச‌சிகலா. கட்சியில் அவர் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. எனவே, அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தவர்கள் பெரும்பாலானோர் கட்சிக்கு திரும்பி விட்டனர். டி.டி.வி.தினகரன் தனியாகத்தான் இருக்கிறார். அவரால் எந்த பாதிப்பும் வராது. தமிழகத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு வர வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். சென்னையில் வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுத்தேன். அவரும் தமிழகம் வருவதாக உறுதியளித்தார். பிரதமருடனும், அமித்ஷாவுடனும் அரசியல் எதுவும் பேசப்படவில்லை. இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

More News >>