பிரிஸ்பேனில் இந்தியாவின் முதல் வெற்றி 32 வருடங்களுக்கு பின் ஆஸ்திரேலியாவுக்கு முதல் தோல்வி
பிரிஸ்பேன் உள்ள காபா மைதானத்தில் இது இந்தியாவின் முதல் வெற்றியாகும். இந்த மைதானத்தில் 32 வருடங்களுக்கு பின்னர் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.டி 20 கிரிக்கெட் போட்டியை விட இன்று பிரிஸ்பேனில் நடந்த டெஸ்ட் போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது என்றால் அது மிகையல்ல. கோஹ்லி, பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜடேஜா, அஷ்வின் உள்பட முன்னணி வீரர்கள் யாரும் இல்லாத இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடிக்கும் என்பதை யாராலும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது. அது இப்போது நடந்துள்ளது.
இந்திய அணியில் நவ்தீப் செய்னி, நடராஜன், ஷார்துல் தாக்கூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய 4 புதுமுக வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் நடராஜனுக்கும் வாஷிங்டன் சுந்தருக்கும் இந்த பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி அரங்கேற்ற போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. செய்னி மற்றும் ஷார்துல் தாக்கூர் இருவருக்கும் இது 2வது டெஸ்ட் போட்டி. இது தவிர மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான சிராஜுக்கு இது 3வது போட்டி மட்டுமே ஆகும். இந்த புதுமுக வீரர்களுடன் அனைவரும் சேர்ந்து தான் இந்திய அணிக்கு வரலாற்றில் மறக்க முடியாத ஒரு வெற்றி இன்று கிடைத்துள்ளது.
பிரிஸ்பேனில் உள்ள இந்த காபா மைதானத்தில் இதுவரை இந்தியா வெற்றி பெற்றதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த மைதானத்தில் இதுவரை இந்தியா இதற்கு முன்பு 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் இந்தியா 5ல் தோல்வியடைந்தது. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த மைதானத்தில் 32 வருடங்களுக்குப் பின்னர் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.1988ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகத் தான் கடைசியாக ஆஸ்திரேலியா இந்த மைதானத்தில் தோல்வி அடைந்தது. 1988க்கு பின்னர் இந்த மைதானத்தில் நடந்த 31 போட்டிகளில் 24 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. பாக்கியுள்ள 7 போட்டிகள் டிராவில் முடிவடைந்தது.
இதிலிருந்தே இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பது நிரூபணமாகும். இந்த போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ள இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்திய அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெற்றதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் 5 கோடி ரூபாய் போனஸ் அறிவித்துள்ளது.