கேரள அரசின் பம்பர் லாட்டரி 12 கோடி தென்காசியை சேர்ந்தவருக்கு கிடைத்தது
கேரளா அரசின் பம்பர் லாட்டரி முதல் பரிசான ₹ 12 கோடி தென்காசியை சேர்ந்த சில்லறை லாட்டரி விற்பனையாளருக்கு கிடைத்துள்ளது. அவரிடம் விற்காமல் இருந்த லாட்டரிக்கு இந்த முதல் பரிசு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.கேரள அரசின் கிறிஸ்துமஸ், புதுவருட பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ₹ 12 கோடியாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. கேரள அரசு லாட்டரியில் இதுதான் மிக அதிக தொகை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிக்கெட்டின் விலை ₹ 300 ஆகும். முதல் பரிசு 12 கோடி என்பதால் டிக்கெட் வெளியான உடனேயே பரபரப்பாக விற்பனையாக தொடங்கியது. மொத்தம் 33 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டன. இந்த டிக்கெட்டுகள் அனைத்துமே விற்பனையானது.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி திருவனந்தபுரத்தில் இந்த லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. திருவனந்தபுரம் நகரத்தின் புதிய மேயரான ஆர்யா ராஜேந்திரன் தலைமையில் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு XG 358753 என்ற எண்ணுள்ள டிக்கெட்டுக்கு கிடைத்தது இந்த டிக்கெட் கேரள, தமிழக எல்லையான ஆரியங்காவு பகுதியில் உள்ள வெங்கடேஷ் என்பவர் நடத்திவரும் கடையில் விற்பனையானது தெரியவந்தது. இந்தப் பகுதி தென்காசி மாவட்ட எல்லையில் உள்ளதாலும், தற்போது சபரிமலை சீசன் என்பதாலும் தமிழகத்தை சேர்ந்த யாராவது தான் இந்த டிக்கெட்டை வாங்கி இருக்கலாம் என கருதப்பட்டது.
குலுக்கல் நடந்து இரண்டு நாள் ஆன பிறகும் அந்த கோடீஸ்வர அதிர்ஷ்டசாலி யார் என தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அந்த அதிர்ஷ்டசாலி யார் என தற்போது தெரிந்து விட்டது. தென்காசியை சேர்ந்த சரபுதீன் என்ற சில்லறை டிக்கெட் விற்பனையாளர் தான் அந்த அதிர்ஷ்டசாலி ஆவார். இவர் வெங்கடேஷிடம் இருந்து லாட்டரி வாங்கி பைக்கில் ஆரியங்காவு முதல் புனலூர் வரை சென்று விற்பனை செய்து வருகிறார். இவரிடம் விற்காமல் இருந்த லாட்டரிக்குத் தான் இந்த முதல் பரிசு ₹ 12 கோடி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. துபாயில் பணிபுரிந்த இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன் ஊருக்கு திரும்பிய பின்னர் லாட்டரி விற்பனை செய்து வருகிறார். இந்த லாட்டரியை இன்று அவர் திருவனந்தபுரம் சென்று லாட்டரித் துறை இயக்குனரகத்தில் ஒப்படைத்தார். பரிசுத் தொகையை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும், பணம் கிடைத்த பின்னர் தான் அது குறித்து தீர்மானிப்பேன் என்றும் சரபுதீன் கூறுகிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். ஏஜென்ட் கமிஷன், வரி நீங்கலாக சரபுதீனுக்கு 7.56 கோடி கிடைக்கும்.