சீமானுக்கு தமிழன் என சொல்ல அருகதை இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

சீமான் உள்ளிட்டோர் தமிழன் என்று சொல்வதற்கே அருகதை இல்லாதவர்கள் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரன்புதூரில் மத்திய அரசின் திட்ட துவக்க நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “காவிரி விஷயத்தில் இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோர் தமிழகத்தில் தவறான புரிதல் காரணமாக உண்மைக்கு புறம்பான நிலையை எடுத்துள்ளார்கள். போலி அரசியல் நிலையை எடுத்துள்ளவர்களுடன் யாரும் சேர வேண்டாம்.

சீமான் உள்ளிட்டோர் நமக்கு உதவியாக உள்ள தலைவர்கள் பற்றி தரக்குறைவாக பேசுவது வேதனையாக உள்ளது. இவர்கள் எல்லாம் தமிழன் என்று சொல்வதற்கே அருகதை இல்லாதவர்கள். விளையாட்டைப் பார்க்கப் போன பெண்களை, இழிவாக பேசுவதற்கா அவர்கள் கட்சி நடத்துகிறார்கள்? அவர்களை மக்கள் மதிக்க வேண்டுமா? இந்த நிலைமை நாளை உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் வரலாம்” என்று தெரிவித்தார்.

நாட்டையே உலுக்கிய ஆசிஃபா சம்பவம் குறித்த கேள்விக்கு, ‘நாட்டில் பெண்கள் மீது இது போன்ற தாக்குதல் யார் செய்தாலும் அவர்கள் மனித மிருகங்கள் தான். மனிதரில் மிருகமாக இருப்பவர்களை அடையாளம் காண்பது கடினம்.

அவர்களுக்கு மிக கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். அதேசமயம், இது போன்ற கொடூரமான சம்பவத்திற்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று சொல்ல துணிவு இருக்கிறதா? அதை யாரும் சொல்ல மாட்டார்கள்’ என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>