152 ஆண்டுகால நிகழ்ச்சி ரத்து.. அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் என்னென்ன மாற்றங்கள்?

கொரோனா பரவல் மற்றும் டிரம்பின் தோல்வியின் காரணமாக அமெரிக்கா அதிபர் பதவியேற்பு விழாவில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜோ பைடன் நாளை புதிய அதிபராக பதவியேற்கவுள்ளார். ஆனால், இம்முறை அதிபர் பதவியேற்பு விழாவில் 4 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

விருந்து இல்லை!

வழக்கமாக பதவி நிறைவு செய்யும் அதிபர், புதிதாக பதவியேற்கும் அதிபருக்கு பதவியேற்பு நாளன்று காலையில் விருந்தளிப்பார். தொடர்ந்து இருவரும் இணைந்து சென்று பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதன் மூலம், அப்போதைய அதிபர் ஒபாமா, டிரம்புக்கு விருந்தளித்தார்.

ஆனால், தற்போது, விருந்து நிகழ்ச்சி நடைபெற வாய்ப்பு இல்லை. ஏனெனில், பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன் என ட்ரம்ப் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். கடந்த 152 ஆண்டுகளில் பதவிகாலம் முடியும் அதிபர், புதிய அதிபரின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருப்பது இதுவே முதன்முறை. நாளை காலையிலேயே வெள்ளைமாளிகையில் இருந்து டிரம்ப் வெளியேறிவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு தீவிரம்!

வழக்கமாக அதிபர் பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது வாஷிங்டன் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். நகரம் முழுவதும் அதிபரின் ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவர். ஆனால், ஜனவரி 6-ம் தேதி நடத்த வன்முறை மீண்டும் நிகழாமல் இருக்க வாஷிங்டன் நகரமே பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எந்தக் கொண்டாட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அதிபர்கள் ஒபாமா, பில் கிளிண்டன் ஆகியோர் ஜோ பைடன் பதியேற்பு விழாவில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

நடன நிகழ்ச்சி ரத்து!

1949-க்கு பிறகு முதன்முறையாக அதிபர் பதவியேற்பு விழாவுக்கான நடன நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. நடன நிகழ்ச்சி நடைபெறும் வால்டர் இ வாஷிங்டன் மையம், கொரோனா காரணமாக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, பதவியேற்பு நிகழ்ச்சியில் லேடி காகா தேசிய கீதம் பாட இருக்கிறார். இது தவிர ஜெனிபர் லோபஸின் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

ஆன்லைனில் அணிவகுப்பு!

புதிய அதிபராக பதவியேற்கும் ஜோ பைடனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸும், கமலா ஹாரிஸுக்கு நீதிபதி சோடாமேயரும் நாளை பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளனர். கொரோனா மற்றும் கலவரம் ஏற்படும் என்ற அச்சம் காரணமாக வழக்கமாக நடைபெறும் அணிவகுப்புகள் மற்றும் பிற இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் இம்முறை ஆன்லைனில் நடைபெறும் என்றும், லைவ் ஸ்டீரிமிங் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>