இனி குறைந்த விலைக்கு எம்பிக்களுக்கு எதுவும் கிடைக்காது நாடாளுமன்ற கேன்டீனில் மானியத்தை நிறுத்த முடிவு
நாடாளுமன்ற கேன்டீனுக்கான மானியத்தை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார். இதனால் இனி முதல் குறைந்த விலைக்கு எம்பிக்களுக்கு உணவு எதுவும் கிடைக்காது. நாடாளுமன்றத்தில் எம்பிக்களுக்காக கேன்டீன் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை, மாலை, இரவு என மூன்று நேரமும் மிகக் குறைந்த விலையில் உணவு விற்பனை செய்யப்படுகிறது. 1968 முதல் வடக்கு ரயில்வே சார்பில் இந்த கேண்டின் நடத்தப்பட்டு வந்தது. இதன் பின்னர் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்குகிறது.
பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஏப்ரல் 8ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இதுதொடர்பான விவரங்களை கூறுவதற்காக சபாநாயகர் ஓம் பிர்லா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. கூட்டத் தொடருக்கு முன்பாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். எம்பிக்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை நடத்துவதற்கு அவரவர்களது வீடுகளிலேயே வசதி ஏற்படுத்தப்படும். நாடாளுமன்ற வளாகத்தில் ஜனவரி 27 மற்றும் 28 தேதிகளில் கொரோனா பரிசோதனைக்கு வசதி ஏற்படுத்தப்படும்.
எம்பிக்களின் உதவியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். ராஜ்யசபா காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், லோக்சபா மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடைபெறும். நாடாளுமன்ற கேண்டீனுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். மானியம் நிறுத்தப்பட்டுள்ளதால் இனி முதல் கேன்டீனில் எம்பிக்களுக்கு உணவுக்கு கூடுதல் கட்டணம் கொடுக்க வேண்டும். மானியம் நிறுத்தப்படுவதின் மூலம் நாடாளுமன்ற செயலகத்திற்கு வருடத்திற்கு 8 கோடி மிச்சமாகும் என கருதப்படுகிறது.