வனத்துறையினர் முயற்சிக்கு பலனில்லை.. முதுமலையில் காது சிதைக்கப்பட்ட நிலையில் காட்டு யானை!

நீலகிரி மாவட்டம் முதுமலை பொக்காபுரம் வனப் பகுதியை ஒட்டியுள்ள பழங்குடி கிராமத்தைச் சுற்றி கடந்த மாத இறுதியில் ஆண் காட்டு யானை ஒன்று நடமாடி வந்தது. அந்த யானையின் முதுகுப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டிருப்பதைப் பார்த்த மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து, யானையை பார்வையிட்ட சிங்காரா வனத்துறையினர், பழங்களில் மாத்திரைகளை வைத்து கொடுத்து வந்தனர். ஆனாலும் காயம் குணமாகாமலேயே இருந்தது. இதனையடுத்து, யானைக்குக் கூடுதல் சிகிச்சை அளிக்க கும்கி யானைகளின் உதவியோடு கடந்த 28-ம் தேதி வனக் கால்நடை மருத்துவ குழுவினர், காட்டு யானையை சுற்றி வளைத்து மயக்க ஊசி செலுத்தினர். தொடர்ந்து, காட்டு யானைக்கு மருத்துவர்கள் 2 மணி நேர சிகிச்சை அளித்து விடுவித்தனர்.

இந்நிலையில், கடந்த 17-ம் தேதி அதே காட்டு யானையின் இடது காது சிதைக்கப்பட்ட நிலையில் கொடுமையான காயத்துடன் ரத்தம் சொட்டச் சொட்ட அவதிப்பட்டது. யானையின் காயத்திற்கு சிகிச்சையளிக்க மயக்க ஊசி செலுத்தி தெப்பக்காடு முகாமுக்கு கொண்டுச் செல்ல வனத்துறையினர் முடிவு செய்தனர். தொடர்ந்து, இன்று யானைக்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி அருகில் நெருங்கிய‌ குழுவினர், முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் வாகனத்தில் ஏற்றி தெப்பக்காடு முகாமுக்குச் சென்றனர். இருப்பினும், செல்லும் வழியிலேயே யானை பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், காயமடைந்த யானையை காப்பாற்ற வேண்டும் தீவிர முயற்சியில் இறங்கினோம். இதற்காக எல்லா ஏற்பாடுகளையும் சரியாகவே செய்துவந்தோம். எதிர்பாராதவிதமாக யானை உயிரிழத்துவிட்டது‌. நாளை உடற்கூறாய்வு மேற்கொள்ள உள்ளோம் என்றார்.

More News >>