ஜோ பிடனுக்கு முதல்முறையாக வாழ்த்து சொன்ன டிரம்ப்..

அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக ஜன.6ம் தேதி அறிவிக்கப்பட்டு, இன்று(ஜன.20) அவர் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார்.கடந்த 6ம் தேதியன்று, நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றியை அறிவிக்க விடாமல் தடுக்க டிரம்ப் ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே டொனால்டு டிரம்ப் தனது தோல்வியை மறுத்துப் பேசியதுடன், ஆதரவாளர்களைப் போராடுமாறு தூண்டி விட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்துதான் கலவரம் வெடித்தது. நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் வன்முறையாளர்கள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். கலவரத்தில் 5 பேர் பலியாகினர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கலவரத்திற்கு இடையே ஜோ பிடன் வெற்றி அறிவிக்கப்பட்டு விட்டதால், இதற்கு மேலும் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த டிரம்ப், கடைசியாகத் தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு விட்டார்.ஆனாலும் அவர் ஜோ பிடன் வெற்றிக்கு வாழ்த்து கூடச் சொல்லாமல் இருந்தார். பொதுவாகவே, புதிய அதிபர் தேர்வானதும் அவருக்கு தற்போதைய அதிபர் வாழ்த்து சொல்வதும், அவரை ஓவல் ஆபீசுக்கு தேனீர் விருந்துக்கு அழைப்பதும் வழக்கம். டிரம்ப்பால் தனது தோல்வியை ஜீரணிக்க முடியாததால், அந்த மரபை கடைப்பிடிக்கவில்லை.

இந்நிலையில், அதிபர் பதவியில் தனது கடைசி நாளான நேற்று(ஜன.19) டிரம்ப் முதல் முறையாக ஜோ பிடன் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் வெளியிட்ட வீடியோவில், புதிய அரசு பொறுப்பேற்க உள்ளது. பாதுகாப்பான, வளமையான அமெரிக்காவை உருவாக்குவதில் புதிய நிர்வாகம் வெற்றியடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம். அவர்களின் நிர்வாகம் சிறக்க வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். அதிபராகப் பதவியேற்கும் ஜோ பிடன், நேற்று(ஜன.19) தனது சொந்த ஊரான வில்மிங்டனில் இருந்து விமானத்தில் வாஷிங்டன் புறப்படும் முன்பு, அங்குள்ள மக்களிடம் உருக்கமாக விடைபெற்றார். மறைந்த தனது மகன் பியாவை அவர் அப்போது நினைவுகூர்ந்தார்.

More News >>