சபரிமலை கோவில் நடை சாத்தப்பட்டது மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்தன

பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று காலை சாத்தப்பட்டது. இன்றுடன் இவ்வருட மகரவிளக்கு கால பூஜைகள் நிறைவடைந்தன. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக அடுத்த மாதம் கோவில் நடை திறக்கப்படும். லட்சக்கணக்கான பக்தர்களின் சரண கோஷம் இன்றி பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடைந்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் 15ம் தேதி மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 41 நாள் நீண்ட மண்டல காலம் டிசம்பர் 26ம் தேதி நடந்த மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது. 3 நாள் இடைவெளிக்குப் பின்னர் டிசம்பர் 30ம் தேதி மாலையில் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் கடந்த ஜனவரி 14ம் தேதி நடந்தது.

இந்நிலையில் இன்று காலை சபரிமலை கோவில் நடை சாத்தப்பட்டது. கடந்த 18ம் தேதியுடன் நெய்யபிஷேகம் நிறைவடைந்தது. நேற்று இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று பந்தளம் மன்னர் பிரதிநிதி மற்றும் திருவாபரணம் கொண்டு வந்தவர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. முன்னதாக இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் 6.30 மணிளவில் கோவில் நடை சாத்தப்பட்டது. இன்றுடன் மகரவிளக்கு காலம் நிறைவடைந்தது. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி மாதம் 12ம் தேதி கோவில் நடை திறக்கப்படும். கொரோனா பரவல் காரணமாக சபரிமலையில் இந்த மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில் பக்தர்கள் வருகை வெகுவாக கட்டுப் படுத்தப்பட்டிருந்தது. மண்டல பூஜைக்கு நடை திறந்த போது 1,000 பக்தர்களுக்கும், பின்னர் 2000 பக்தர்களுக்கும் கடைசியில் 5 ஆயிரம் பக்தர்களுக்கும் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

முழுக்க முழுக்க ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் கொரோனா பரிசோதனையும் நடத்த வேண்டும். பக்தர்கள் எண்ணிக்கை குறைந்ததால் இவ்வருடம் சபரிமலை கோவில் வருமானமும் கடுமையாக குறைந்தது. வழக்கமாக மண்டல, மகர விளக்கு சீசனில் ₹ 300 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும். ஆனால் இம்முறை ₹ 25 கோடிக்கும் குறைவாகவே வருமானம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் கால் வைக்கக் கூட இடமில்லாத அளவுக்கு கூட்டம் காணப்படும். சில நாட்களில் பக்தர்கள் 20 மணி நேரத்திற்கும் அதிகமாக வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்து விட்டு செல்வார்கள். ஆனால் இவ்வருடம் பக்தர்களின் வருகை கடுமையாக குறைந்ததால் சபரிமலை வெறிச்சோடி காணப்பட்டது. மகரஜோதியை தரிசிக்கக் கூட பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.

More News >>