கொரோனா வைரஸ் என்பது காமெடி கிடையாது.. சானியா மிர்சா ஆதங்கம்!

கொரோனா வைரஸ் என்பது காமெடி அல்ல என பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சானியா மிர்சா குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்தது குறித்து பகிர்ந்துள்ளார். சானியா மிர்சா கூறுகையில், எனக்கு கொரோனா தொற்று இருந்தது. ஆனால், இறைவனின் அருளால் நலமாக இருக்கிறேன்.

அதேநேரத்தில் என் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். கொரோனா தொற்றுக்கான தீவிரமான அறிகுறிகள் எனக்கு இல்லை என்பது என் அதிர்ஷ்டம். இருந்தாலும், என் இரண்டு வயது மகனையும் குடும்பத்தினரையும் விட்டு, தனிமையில் இருந்தது கஷ்டமாக இருந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டவர்களையும் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

அடுத்து என்ன நடக்கும் எனத் தெரியாமல் விதவிதமான கதைகளைக் கேட்டுக்கொண்டு அதைக் கடந்து செல்வது என்பது அவ்வளவு எளிதல்ல. நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்வது என்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் கடினமான விஷயம். இந்த அனுபவத்தில் இருந்து மீண்டு வந்திருப்பதால், என்னால் ஒரு விஷயத்தைச் சொல்ல முடியும், நான் குணமடைந்துவிட்டேன். ஆனால், என் குடும்பத்தினரை எப்போது மீண்டும் பார்ப்போம் எனத் தெரியாமல் இருந்ததுதான் பயமாக இருந்தது.

கொரோனா வைரஸ் என்பது காமெடி இல்லை. என்னால் முடிந்தவரை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டேன். இருப்பினும் எனக்கு தொற்று இருந்தது. எனவே, நம்மையும், நம் குடும்பத்தினரையும் காக்க நம்மால் முடிந்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள்; கைகளைக் கைழுவுங்கள்; உங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும் இந்தத் தொற்றில் இருந்து காத்துக்கொள்ளுங்கள்! எல்லோரும் ஒருங்கிணைந்து போராடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

More News >>