இது முதல்முறை அல்ல, ஆனால் வெற்றி பிரமிப்பானது!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 1996-1997 முதல் பார்டர் கவாஸ்கர் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தியா அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் ஆலன் பார்டர் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் முதன் முதலில் 10000 ரன்களை கடந்தனர். இவர்களின் சாதனையைப் போற்றும் வகையில் இந்த இரு அணிகளுக்கும் இடையே இந்த தொடர் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு மற்றும் 2010 ல் நடந்த தொடர்களும் நான்கு போட்டிகளுக்கும் குறைவாகவே தொடர் அமைக்கப்பட்டது. பின்னர் அனைத்து தொடர்களும் நான்கு போட்டிகளைக் கொண்ட தொடராகவே நிர்ணயிக்கப்பட்டது. இந்த தொடரில் வெற்றிபெறும் அணியிடம் கோப்பை வழங்கப்படும், பின்னர் அடுத்த தொடரை வெல்லும் அணி, தோல்வி அடைந்த அணியிடம் இருந்து கோப்பையை பெற்றுக் கொள்ளும். இதுவரை பார்டர் கவாஸ்கர் தொடரானது 15 முறை விளையாடப்பட்டு, அதில் 10 தொடரில் இந்திய அணியும், 5 தொடரில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த 2020-2021 தொடரின் வெற்றி மட்டும் ஏன் இவ்வளவு விமர்சையாக கொண்டாடப்படுகிறது?
15 தொடரில் 10 தொடரை வென்றிருந்தாலும், இந்த 2020-2021 தொடர் மட்டும் இவ்வளவு விமர்சையாக கொண்டாடப்படப் பல காரணங்கள் உள்ளது. இந்த தொடரின் வெற்றி வெற்றியாளர்களால் மகுடம் சூடப்பட்டதல்ல, பல கனவுகளைச் சுமந்து வெற்றி வேட்கையோடு பல தடைகளைத் தகர்த்தெறிந்து களத்தில் புகுந்துள்ள ஊர்க்குருவிகளின், ஆகாயம் தேடும் தேடலின் முதல் படியின் இமாலய வெற்றி. அதனால் தான் அனைத்து தரப்பினராலும் வெகு விமர்சையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது.
ஒருநாள் போட்டி தொடரை இழந்தாலும், அடுத்த இருபது ஓவர் தொடரை வென்று, தன்னம்பிக்கையோடு டெஸ்ட் தொடரில் களமிறங்கியது இந்திய அணி. நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்ட் போட்டி கோலி தலைமையில் அடிலெய்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சை சிறப்பாக தொடங்கினாலும், இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் மிகப்பெரிய அவமானத்தோடு, தோல்வியையும் தழுவியது இந்திய அணி. இந்த போட்டி முடிந்தவுடன் கோலி தனது முதல் குழந்தை பிறப்பு காரணமாக தாயகம் திரும்பினார்.
டாஸில் வெற்றி பெறாத ரகானே!
பின்னர் நடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் பொறுப்பு கேப்டனாக விளையாடிய ரகானே, ஒரு போட்டியிலும் டாஸ் வெற்றி பெறாமல், இரண்டு போட்டிகளில் வெற்றி மற்றும் ஒரு போட்டியை டிராவில் முடித்து காட்டியுள்ளார். வெற்றியின் ஒரு புள்ளி தான் டாஸ் நிர்ணயிக்கும், என்பதனை இந்த தொடரில் இருந்து அறிந்து கொள்ளலாம். கோலியின் இல்லாமை, இஷாந்த் ஷர்மா, பும்ரா, அஷ்வின், விஹாரி என அடுத்தடுத்த வீரர்கள் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேற இனி அணியின் நிலைமை யாருமறியாத கேள்விக்குறியாகவே இருந்தது.
எதிரணியை உசுப்பேற்றல், நிறவெறி ஆகியவற்றை கையிலெடுத்த ஆஸ்திரேலியா அணி!
இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை 1-1 என்று சமநிலை படுத்தியது. அடுத்து மூன்றாவது போட்டியில் களமிறங்கிய இந்திய அணியை, ஆஸ்திரேலியா அணியினர் வழக்கம்போல் அவர்களின் பாணியில் எதிரணியினரை களத்தில் வெறுப்பேற்றி வெற்றி பெறும் உத்தியை கையில் எடுத்தனர். ஆனால் இளம் வீரர்களின் பாணி அவர்களின் அனுபவத்தை மிஞ்சி அனைவரும் வியக்கும் வகையில் இருந்தது. களத்தில் எதிரணி வீரர்களுடன் வாய் சவடால் விடமால், தனது திறமையின் மூலம் பதிலளித்து அசத்தினார் இளம் காளைகள். இந்நிலையில் இந்திய வீரர்களின் மீது நிறவெறியை நெருப்பு பிழம்போல் உமிழத்தொடங்கினர் ஆஸ்திரேலியா ரசிகர்கள். சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோரை குரங்கு என எல்லை மீறி விமர்சித்த ரசிகர்களுக்கு நீங்காத பரிசை அளித்தனர் இந்திய அணியினர்.
புஜாரா, விஹாரி, அஸ்வின், பும்ரா விலகல்?
மூன்றாவது போட்டியை டிரா செய்ய போராடிய இந்திய அணியில் அனைவரையும் மலைக்கவைத்த, புஜாரா, விஹாரி மற்றும் அஷ்வின் என அனைவரும் பல தடைகளையும் மீறி நிதானமாக விளையாடி, அணியை தோல்வியில் இருந்து மீட்டெடுத்து போட்டியை டிராவில் முடித்தனர். இந்த போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால் பிரிஸ்பேனில் உள்ள காப்பா ஆடுகளத்தில் நடந்த நான்காவது போட்டியில் இவர்கள் யாரும் விளையாடவில்லை.
அனுபவத்தை, தன்னம்பிக்கையால் வென்றெடுத்த இளம் படையினர்!
இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில், நான்காவது போட்டி காப்பாவில் தொடங்கியது. இந்த போட்டியில் ரகானே, ரோகித் சர்மா ஆகியோரை தவிர்த்து மற்ற அனைவரும் இளம் வீரர்கள் தான். மேலும் பந்து வீச்சாளர்களில் பெரும்பாலானோர் இந்த தொடரில் களம் கண்டவர்கள். முதல் இன்னிங்சில் 33 ரன்கள் முன்னிலையோடு, இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது ஆஸ்திரேலியா அணி. ஒரு கட்டத்தில் மிகப்பெரிய இலக்கை ஆஸ்திரேலியா அணி முன்னிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த மிகப்பெரிய படையை தனது பவுன்சர் கணைகளால் நிலைகுலைய வைத்த முகமது சிராஜ் 73/5 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் நம்பிக்கையை சற்று உயர்த்தினார். பின்னர் 327 எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.
ஜாம்பவான்களின் கருத்தை கானலாக்கிய காவிய வீரர்கள்!
முதல் டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய தோல்வியை தழுவிய, இந்திய அணியால் மீளவே முடியாது, இதுவே இந்திய அணியை ஓயிட்வாஷ் செய்ய சரியான தருணம் ன ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்கள் அனைவரும் கருத்து கணிப்பு என்ற பெயரில், ரிக்கி பாண்டிங் முதல் மைக்கேல் கிளார்க் வரை அனைவரும் இந்திய அணியின் தன்னம்பிக்கையை உடைக்கும் முயற்சியில் இறங்கினார். பிரிஸ்பேனில் கடந்த 30 ஆண்டுகளாக தோல்வியை சந்திக்காத ஆஸ்திரேலியா அணியை, அதன் ராஜ்ஜியத்தில், அந்த அணியின் கணமான மகுடத்தை, வெற்றி என்ற ஆருடம் ஏந்திய இளம் வீரர்களால் நொறுக்கப்பட்டு, வரலாற்றை மீண்டும் திருத்தி எழுதியது இந்திய அணி.
31 ன் கணத்தை தாங்காத 1042!
ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்ற பந்து வீச்சாளர்கள் அனைவரும் அனுபவசாலிகள் மட்டும் அல்ல பல முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்தி, சாதனைகளை படைத்தவர்கள். இவர்களின் ஒட்டுமொத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கையே 1042. ஆனால் இந்திய அணியில் இடம்பெற்ற பந்து வீச்சாளர்களில சிராஜ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர் இந்த தொடரில் மட்டுமே முதன் முதலில் களமிறங்கினர். இவர்களுடன் ஷர்துல் தாக்கூர் மற்றும் சைனியும் பெரிய அனுபவம் இல்லாத வீரர்கள் ஆக இந்த வீரர்களின் மொத்த விக்கெட் எண்ணிக்கை வெறும் 31 மட்டுமே. இந்த அணிதான் பெரிய ஜாம்பவான்களை கொண்ட அணியை தவிடு பொடியாக்கி அரியணையில் ஏறி அமர்ந்தது.
இப்படிப்பட்ட வெற்றியை கொண்டாடி தான் ஆக வேண்டும். வாழ்த்துக்கள் இந்திய அணி.