அண்ணாத்த படத்துக்கு முன் சிவா இயக்கத்தில் பிரபல ஹீரோ..
அஜீத்குமார் நடித்த விஸ்வாசம், வீரம், விவேகம் ஆகிய படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. அதற்கு முன்பாக அவர் கார்த்தி தமன்னா நடித்த சிறுத்தை என்ற படத்தை இயக்கினார். கடந்த 2019ம் ஆண்டு சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது சூரியாவின் 39 படமாக உருவாகவிருந்தது. எதிர்பாராத விதமாக விஸ்வாசம் படம் சூப்பர் ஹிட் ஆனதில் சிவாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது.
இதையடுத்து அவர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றார். சூர்யா படம் தள்ளிவைக்கப் பட்டது.அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கிக் கடந்த தீபாவளி தினத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டது. அதற்கேற்ப படப்பிடிப்பும் தொடங்கியது. திடீரென்று கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அண்ணாத்த படப்பிடிப்பு தடைப்பட்டது. 6 மாதங்களுக்குப் பிறகு படப்பிடிப்புகளைத் தொடங்க அரசு அனுமதி அளித்தது.
ஆனாலும் கொரோனா அபாயம் குறைய வேண்டும் என்று ரஜினி படக் குழு காத்திருந்தது.பின்னர் கடந்த டிசம்பர் 13ம் தேதி மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் ஷூட்டிங்கில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்த்துக்கும் அடுத்த நாளில் ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 3 நாள் சிகிச்சைக்குப் பிறகு ஐதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார். தற்போது அண்ணாத்த படப்பிடிப்பைச் சட்ட சபை தேர்தல் முடிந்த பிறகு தொடங்கலாம் என ரஜினி தெரிவித்திருப்பதையடுத்து ஏப்ரலுக்கு பிறகே அதன் படப் பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. இந்நிலையில் தான் சிவா புதிய படத்தை கையிலெடுக்க உள்ளார். கடந்த 2019ம் ஆண்டு தொடங்குவதாக இருந்த சூர்யாவின் படத்தை இயக்க தயாராகிறார் சிவா. இதற்கிடையில் சூர்யா, கவுதம் மேனன் இயக்கும் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை மணிரத்னம் தயாரிக்கிறார்.