லண்டன் டூ பாரீஸ் 47 நிமிடம்: அதிவேக மிதக்கும் ரயிலை அறிமுகம் செய்தது சீனா
சீனா: சீனாவில் அதிவேக மிதக்கும் ரயிலை அறிமுகம் செய்து சாதனை படைத்துள்ளது. சீனாவின் தென்மேற்கு ஜியோ தாங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மிதக்கும் ரயிலை உருவாக்கியுள்ளனர். உயர் வெப்ப சூப்பர்கண்டக்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் ரயில் தாண்டவாளங்களில் தொட்டுச்செல்லாமல் மிதந்தபடி அதிவேகமாக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரயிலில் சக்கரங்கள் இல்லாததால் உராய்வு மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும் காந்தமயப்படுத்தப்பட்ட தாண்ட வாளத்தின் மீது ரயில் காற்றில் மிதந்தபடி வேகமாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த மிதக்கும் ரயிலை 69 அடி நீள மாதிரியை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். அடுத்த 3 வருடங்கள் முதல் 10 வருடங்களுக்குள் முழு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இயக்கவியல் அடிப்படையில் இயங்கும் மிதக்கும் ரயில் மணிக்கு 620 கிமீ வேகத்தில் செல்லும். இந்த மிதக்கும் ரயிலில் பயணித்தால் லண்டனிலிருந்து பாரீஸுக்கு 47 நிமிடங்களில் சென்றுவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரயிலை மணிக்கு 800 கிமீ வேகத்தில் பயணிக்கும் வகையில் உருவாக்கும் முயற்சிகளையும் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுவருவதாகக் கூறியுள்ளனர்.