76வது வயதில் நடிகரானார் மலையாள நடிகர் உண்ணிகிருஷ்ணன் 98வது வயதில் கொரோனா பாதித்து மரணம்
மலையாள நடிகர் உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கொரோனா பாதித்து 98வது வயதில் மரணமடைந்தார். 76 வயதில் தற்செயலாக நடிகரான இவர், சந்திரமுகி, பம்மல் கே சம்பந்தம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மலையாள சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக இருப்பவர் கைதப்புரம் தாமோதரன் நம்பூதிரி. இவரது மாமனார் உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி (98). இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பையனூர் ஆகும். இந்நிலையில் மலையாள சினிமாவின் முன்னணி டைரக்டரான ஜெயராஜ், கடந்த 26 வருடங்களுக்கு முன் தேசாடனம் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் வயதான ஒரு கேரக்டருக்கு தகுந்த நடிகரை ஜெயராஜ் தேடிக் கொண்டிருந்தார்.
இந்த சமயத்தில் அந்தப் படத்தில் பாடல் எழுதுவதற்காக அவர் கைதப்புரம் தாமோதரன் நம்பூதிரியின் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது வீட்டில் உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி இருந்தார். அவரை பார்த்தவுடன் ஜெயராஜ் தன்னுடைய படத்தில் நடிக்க வைத்தார். அப்போது உண்ணிகிருஷ்ணனுக்கு வயது 76. இதன்பிறகு ராப்பகல், கல்யாண ராமன், ஒராள் மாத்ரம் உள்பட ஏராளமான படங்களில் நடித்த இவர், தமிழில் ரஜினிகாந்துடன் சந்திரமுகி, கமலுடன் பம்மல் கே சம்பந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உட்பட பல படங்களில் நடித்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கண்ணூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பின் உடல் நலம் தேறிய அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பின் அவருக்கு கொரோனா நெகட்டிவ் ஆனது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பையனூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மாலை மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மலையாள நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.