டெல்லியில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை இதுவரை தற்கொலை செய்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இதுவரை தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் விவசாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்த போராட்டத்தின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்து வருகின்ற போதிலும் இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லை.
மேலும் இதுவரை விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு 9 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் தான் முடிவடைந்தன. சட்டத்தை வாபஸ் பெற முடியாது என்று மத்திய அரசும், வாபஸ் பெறும் வரை போராட்டத்தைக் கைவிட முடியாது என்று விவசாயிகள் சங்கத்தினரும் பிடிவாதமாக இருந்ததால் இந்தப் போராட்டம் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசு ஒரு படி கீழே இறங்கி வந்தது. இதன்படி போராட்டத்தை வாபஸ் பெற்றால் ஒன்றரை வருடங்களுக்குச் சட்டத்தை அமல்படுத்துவது நிறுத்தி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து இன்று ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதன்படி இன்று விவசாயிகள் சங்கத்தினர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படும். இதற்கிடையே போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இதுவரை தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.