இந்தியாவிடம் கொரோனா தடுப்பூசி வாங்க போட்டி போடும் நாடுகள் இதுவரை 92 நாடுகள் விண்ணப்பம்
இந்தியாவிடம் கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு பல்வேறு நாடுகள் போட்டி போட்டு வருகின்றன. இதுவரை தடுப்பூசி கேட்டு 92 நாடுகள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் சிரம் இன்ஸ்டியூட் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் கடந்த 16ம் தேதி முதல் இந்தியாவில் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு போடப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு முதல் கட்டத்தில் தடுப்பூசி போட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கும் பக்க விளைவுகள் அதிகமாக இல்லை என்று கூறப்படுகிறது.
ஒரு சில இடங்களில் மட்டுமே சில குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் உலகம் முழுவதும் இந்தியா தயாரித்துள்ள இந்த தடுப்பூசிகளுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதுவரை தடுப்பூசி கேட்டு 92 நாடுகள் இந்தியாவிடம் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் முதல் கட்டமாக அண்டை நாடுகளுக்கு மட்டும் தடுப்பூசிகளை கொடுக்க இந்தியா தீர்மானித்துள்ளது. இதன்படி பூடான், மாலத்தீவு, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு நேற்று தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன. மியான்மர், சிஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு நாளை தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகிறது.
இது தவிர இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மொரீசியஸ் ஆகிய நாடுகளுக்கும் தடுப்பூசிகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என கருதப்படுகிறது. பொலிவியா மற்றும் டொமினிக்கன் ரிபப்ளிக் ஆகிய நாடுகளும் தங்களுக்கு தடுப்பூசி வேண்டும் என்று இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையே தேவைப்பட்டால் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் கூட தடுப்பூசி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது என கூறப்படுகிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் தான் கொரோனா அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாடும் இந்தியாவிடம் தடுப்பூசி கேட்டுள்ளது. இதற்காக பிரேசில் சிறப்பு விமானத்தை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த நாட்டுக்கு 20 லட்சம் டோஸ் தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட உள்ளது.