`வெட்கமாயில்லை..!- சிறைபிடிக்கப்பட்ட ஜிக்னேஷ் மேவானி காட்டம்

குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி இன்று ராஜஸ்தான் விமான நிலையத்தில் போலீஸார் வலுக்கட்டாயமாக சிறைபிடித்துள்ளனர்.

குஜராத்தில் நடந்த உனா போராட்டத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. 21-ம் நூற்றாண்டின் மிகப் பெரிய தலித் மக்கள் எழுச்சிப் போராட்டமாக அது பார்க்கப்படுகிறது. அதை முன்னின்று அணி திரட்டி நடத்தியவர் ஜிக்னேஷ் மேவானி.

ஜிக்னேஷ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். தொடர்ந்து பாஜக-வுக்கு எதிரான அரசியலைப் பேசி வரும் அவரைக் கண்டாலே மத்தியில் ஆளும் கட்சி பதறுகிறது.

அவர் எங்கு சென்றாலும் போலீஸ் மூலம் தொந்தரவு கொடுத்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் அம்பேத்கரின் பிறந்த நாள் நேற்று நடந்தது. இதையொட்டி, மேவானி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.

ஆனால், அவரை விமானநிலையித்திலேயே போலீஸார் வழிமறித்து சிறை வைத்துள்ளனர். இது குறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார் மேவானி.

மேவானி, `என்னை ஜெய்ப்பூர் விமானநிலையத்திலேயே ராஜஸ்தான் போலீஸ் கைது செய்துள்ளது. நான் ஜெய்ப்பூரின் எந்தப் பகுதிக்கும் போக முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

குஜராத்துக்கே மீண்டும் சென்றுவிடும்படி வற்புறுத்துகின்றனர். என்னை இப்படி வலுகட்டாயமாக சிறை வைப்பதற்கு போலீஸாரிடம் ஏதாவது வாரன்ட் இருக்கிறதா என்று கேட்டால், எந்தப் பதிலும் இல்லை. ராஜஸ்தான் அரசு இந்தச் செயலுக்கு வெட்கப்பட வேண்டும்’ என்று கொதித்துள்ளார். ராஜஸ்தானில் பாஜக அரசு ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>