கர்நாடகா கல்குவாரியில் பயங்கர குண்டுவெடிப்பு.. 8 பேர் பரிதாபச் சாவு..

கர்நாடகாவில் ஒரு கல்குவாரியில் நள்ளிரவில் பயங்கர குண்டுவெடித்து 8 பேர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம் எனக் கூறப்படுகிறது. கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவின் சொந்த மாவட்டமான சிவமோகாவில் ஹுனாசோன்டி என்ற கிராமத்தின் அருகே ரயில்வே கல்குவாரி உள்ளது. இங்கு நேற்று(ஜன.21) இரவு 10.30 மணியளவில் பயங்கர குண்டுவெடித்தது. இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

குவாரியில் மேலும் குண்டுகள் வெடிக்கலாம் என்ற அச்சம் காரணமாக அந்த பகுதி முழுவதையும் சீல் வைத்து யாரையும் விடாமல் தடுத்தனர். தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். போலீஸ் கூடுதல் டிஜிபி பிரதாப் ரெட்டி கூறுகையில்,குவாரிக்கு தேவையான டைனமைட் குச்சிகள்(ஜெலட்டின்) அடங்கிய சரக்கு லாரியில் தான் திடீரென வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. சரக்கு லாரி உருக்குலைந்து காணப்படுகிறது.

எனினும் அதிலிருந்த வெடிபொருட்கள்தான் வெடித்தனவா அல்லது அங்குள்ள குடோனில் வெடித்ததா என்று தெரியவில்லை. மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்பதால் மீட்புப் பணிகளை இருளில் மேற்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார்.இந்த குண்டுவெடிப்பில் இது வரை 8 பேர் பலியாகியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த முதல்வர் எடியூரப்படா உத்தரவிட்டுள்ளார்.

More News >>