கொரோனா பாதிப்பு.. சசிகலா உடல்நிலை சீராக உள்ளது.. விக்டோரியா மருத்துவமனை தகவல்..
கொரோனா பாதித்துள்ள சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகப் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை டாக்டர் தெரிவித்துள்ளார்.அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தார். அவர் வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளார். இதற்கிடையே, அவருக்குக் கடந்த 20ம் தேதி மாலையில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள போரிங் லேடி கர்சான் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சசிகலாவுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்சனை மற்றும் சளி, காய்ச்சலாலும் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது. அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், ஆக்சிஜன் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை டீன் மனோஜ் தெரிவித்தார். இதன்பிறகு, சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும், அவருக்கு ஆர்.டி. பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்ததில் அந்நோய்த் தொற்று பாதிக்கவில்லை என்று தெரியவந்தது.ஆனாலும், அவருக்கு சி.டி. ஸ்கேன் செய்வதற்காகப் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் செய்ததில் கொரோனா தொற்று பாதிப்புள்ளதாகத் தெரிய வந்தது.
இதையடுத்து, அவர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர் ரமேஷ் கண்ணா கூறியதாவது:சசிகலாவுக்கு நுரையீரலில் தொற்று பாதித்திருக்கிறது. அதனால் அவர் மூச்சுவிட முடியாமல் திணறி வருகிறார். அவருக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் ஏற்கனவே சர்க்கரை நோயால் அவதிப்படுவதால், அவரை ஐ.சி.யூ.வில் சேர்த்துத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் சில நாட்கள் மருத்துவமனையில் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார்.இவ்வாறு டாக்டர் ரமேஷ்கண்ணா கூறினார். சசிகலாவுக்கு கொரோனா பாதித்துள்ளதால், அவர் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறவிருக்கிறார். வரும் 27ம் தேதிக்குள் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படாவிட்டாலும், 27ம் தேதி காலை 10 மணிக்கு அவர் சிறைத் தண்டனை முடிந்ததாக அறிவிக்கப்பட்டு விடுவார். அதன்பின், அவர் சிகிச்சை முடிந்ததும் சென்னைக்குத் திரும்பி விடுவார் என்று சிறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.