ஆக்ஷன் ஹீரோவின் வரலாற்று படம் இயக்கும் ஷங்கர்.. இந்தியன் 2 படம் கதி என்ன?
தென்னிந்தியாவில் பிரமாண்ட படங்களை இயக்கும் இயக்குனர் என்றால் ஷங்கர், ராஜ மவுலி என இருவரைக் கூறலாம். காதலன் படம் தொடங்கி முதல்வன், ஜீன்ஸ், இந்தியன், சிவாஜி, அந்தியன், எந்திரன், 2.0, எனத் தான் இயக்கிய எல்லா படங்களையும் பிரமாண்ட செலவில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாகத் தமிழ்ப் படங்களை இயக்கியவர் ஷங்கர். அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படம் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது.
அதிக பட்ஜெட் என்பதால் பட்ஜெட்டை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவன பிரச்சனை, ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து ஏற்பட்டு உயிர்பலி- பல கோடி இழப்பு, கொரோனா கால ஊரடங்கு என பல்வேறு பிரச்சனைகளில் இப்படம் சிக்கி இருக்கிறது. இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது பற்றி எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் பொறுமை இழந்த இயக்குனர் ஷங்கர், இந்தியன்2 படப்பிடிப்பை உடனடியாக தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது நான் வேறு படத்தை இயக்க வேண்டி இருக்கும் என்று படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஷங்கர் கடிதம் எழுதினார். அதில் சமரச பேச்சு நடப்பதாகத் தகவல் வந்தது. சமரசம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் ஷங்கர் வேறு படத்தை இயக்க தயாராகி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு கன்னட நடிகர் யஷ் நடித்து வெளியான கே ஜி எஃப் சேப்டர் 1 படம் இந்திய அளவில் பல மொழிகளில் திரைக்கு வந்து சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தின் 2ம் பாகத்தில் யஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஒன்றரை வருடமாக நடந்தது. இந்தி நடிகர் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரசாந்த் நீல் இயக்குகிறார். கொரோனா கால ஊரடங்கு தளர்வில் இதன் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்தது. சஞ்சய் தத், யஷ் நடித்த பயங்கரமான சண்டை காட்சிகளுடன் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு படம் முற்றிலுமாக முடிவடைந்தது. இதன் டீஸர் வெளியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. யஷ் அடுத்து ஷங்கர் இயக்கத்தில் நடிப்பார் என்ற பேச்சு எழுந்துள்ளது.
ஷங்கர் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் தனது அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட்டில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தில்தான் யஷ் நடிக்க உள்ளதாகத் தெரிகிறது. இதுவொரு வரலாற்றுப் பின்னணியிலான படமாக உருவாகவிருக்கிறதாம். ஆனால் இதுபற்றி இன்னும் ஷங்கர் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும் இந்த தகவல் ஷங்கர், யஷ் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி இருக்கிறது. யஷ் தற்போது தனது கே ஜி எஃப்2 படம் ரிலீஸ் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார். அதன் பிறகு புதிய பட அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.