அனைவரும் சினிமா தியேட்டருக்கு வாருங்கள் சினிமா தொழிலை காப்பாற்றுங்கள் பிரபல நடிகர் உருக்கம்
'ரசிகர்கள் அனைவரும் சினிமா பார்ப்பதற்கு தியேட்டர்களுக்கு வரவேண்டும். நலிந்து கொண்டிருக்கும் இந்த தொழிலை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்' என்று பிரபல மலையாள நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். 10 மாதங்களுக்குப் பின்னர் இன்று வெளியாகியுள்ள ஜெயசூர்யா நடத்த வெள்ளம் என்ற மலையாள படத்திற்கான பிரமோஷன் வீடியோவில் மோகன்லால் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு மேலாகக் கேரளாவில் மூடப்பட்டிருந்த சினிமா தியேட்டர்கள் கடந்த 13ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக சுமார் 350க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து தியேட்டர்களிலும் விஜய்யின் மாஸ்டர் படம் திரையிடப்பட்டது. கடந்த 11 நாட்களாக இந்த மாஸ்டர் படம் அனைத்து தியேட்டர்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 10 மாதங்களுக்குப் பின்னர் இன்று முதல் மலையாளப் படம் ரிலீசாகி உள்ளது.
பிரபல நடிகர் ஜெயசூர்யா நடித்த இந்த படம் கேரளாவில் 150 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தப் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக வெளியாகவில்லை.இந்நிலையில் இந்தப் படம் வெளியாவதை ஒட்டி பிரபல நடிகர் மோகன்லால் தன்னுடைய சமூக இணையதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: நீண்ட 1 வருடத்திற்குப் பின்னர் வெள்ளம் என்ற ஒரு மலையாள படம் இன்று ரிலீஸ் ஆகிறது. சினிமாவின் சக்கரம் சுழல வேண்டும் என்றால் சினிமாக்கள் வரவேண்டும். அதை நீங்கள் பார்க்க வேண்டும். நான் உட்படப் பல நடிகர்கள் நடித்த படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளது. நலிவடைந்து கொண்டிருக்கும் இந்த தொழிலை சிக்கலில் இருந்து காப்பாற்ற உங்களைப் போன்ற ரசிகர்களால் தான் முடியும்.
எனவே நீங்கள் அனைவரும் தியேட்டர்களுக்கு வரவேண்டும். கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் சினிமா பார்க்க வேண்டும். கடந்த பல மாதங்களாகக் கலைஞர்கள் என்ன செய்யவேண்டும் எனத் தெரியாமல் கடும் சிரமத்தில் உள்ளனர். பல வருடங்களாக இந்த சினிமா துறையில் இருப்பவன் என்ற முறையில் நான் உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் இல்லாவிட்டால் இந்த தொழில் வளராது. அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.