செயற்கை நுண்ணறிவு கேமரா... உ பி போலீசார் அதிரடி
ஆபத்தில் இருக்கும் பெண்களை அவர்களின் முக பாவனைகளை வைத்துக் கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவு கேமரா வருகிறது. உத்திர பிரதேச மாநிலத்தில் முதன் முதலாக இந்த கேமராவை பொருத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் உத்திர பிரதேச மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது. இங்கு நாள்தோறும் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பலாத்காரம் செய்வதோடு மட்டுமில்லாமல் கொடூரமான முறையில் அவர்களைக் கொல்லும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
கடந்த 2017 ம் ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்த விவரங்கள் கடந்த 2019ம் ஆண்டு தான் வெளியிடப்பட்டன. இதன்படி 2017ம் ஆண்டு நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக 3,78,277 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்கு முந்தைய ஆண்டு 3,59,849 குற்றச் சம்பவங்கள் நடந்தன. இதில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் தான் மிக அதிகமாக 59,445 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 35,497 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உத்திர பிரதேச மாநிலத்தில் போலீசார் என்கவுண்டர் உள்படப் பல கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற போதிலும் அங்குப் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறையவில்லை. இந்நிலையில் குற்றங்களைத் தடுப்பதற்காக நவீன உத்திகளைக் கையாள இம்மாநில போலீசார் தீர்மானித்துள்ளனர். இதன்படி மாநிலத்தின் முக்கிய இடங்களில் ஆபத்தில் சிக்கும் பெண்களின் முக பாவனைகளை வைத்துக் கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவு கொண்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெண்களின் முக பாவனைகளை வைத்து அவர்கள் ஆபத்தில் சிக்கி உள்ளார்களா என்பதை இந்த செயற்கை நுண்ணறிவு கேமரா எளிதில் கண்டுபிடிக்கும். பின் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு இந்த கேமராவில் இருந்து தகவல் செல்லும். தகவல் கிடைத்தவுடன் போலீசார் அங்கு விரைந்து சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். முதற்கட்டமாக 200 முக்கிய இடங்களில் இந்த கேமராக்களை நிறுவத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.