கொரோனா தடுப்பில் இந்தியா தன்னிறைவு பெற்று விட்டது பிரதமர் மோடி பேச்சு
கொரோனா தடுப்பில் இந்தியா முற்றிலும் தன்னிறைவு பெற்று விட்டது என்று பிரதமர் மோடி கூறினார். தனது சொந்த தொகுதியான வாரணாசியில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுடன் காணொலி மூலம் உரையாடும் போது மோடி இவ்வாறு குறிப்பிட்டார்.இந்தியாவில் சிரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி கடந்த 16ம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாகச் சுகாதாரத் துறை ஊழியர்கள் மற்றும் கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள முன் களப்பணியாளர்கள் 3 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மட்டுமில்லாமல் இந்த தடுப்பூசி மியான்மர், பங்களாதேஷ், நேபாளம் உள்பட அண்டை நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இதுமட்டுமில்லாமல் இந்தியாவின் கொரோனோ தடுப்பூசியைக் கேட்டு பிரேசில், டொமினிக்கன் ரிபப்ளிக் உள்பட இதுவரை 90க்கும் மேற்பட்ட நாடுகள் விண்ணப்பித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.இந்நிலையில் பிரதமர் மோடி தன்னுடைய சொந்த தொகுதியான வாரணாசியில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுடன் காணொலி மூலம் உரையாடினார். அப்போது அவர் கூறியது: ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் மூலம் நம் நாட்டின் தூய்மை உறுதி செய்யப்பட்டது.
இது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கும் உதவியது. தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவால் தன்னிறைவு பெற முடிந்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும். நம்முடைய நாட்டில் இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதை நம் நாட்டில் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. முதல் கட்டத்தில் வாரணாசியில் 15 மையங்களில் 20,000 சுகாதாரத் துறை ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடப்படும். உலகத்திலேயே மிகப் பெரிய தடுப்பூசி முகாம் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசி இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றடைந்து விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.