8.15 நிமிடத்தில் 2 கி.மீ செல்ல வேண்டும்.. கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதி அறிவித்தது பிசிசிஐ!
8.15 நிமிடங்களில் 2 கி.மீ தூரத்தை கடக்க வேண்டும் என கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ புதிய விதியை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட புதிய விதிகளில், பி.சி.சி.ஐ ஒப்பந்தத்தில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள், இந்திய அணிக்கு தேர்வாக நினைக்கும் வீரர்கள், யோ யோ டெஸ்ட் உடன், சோதனையிலும் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாகவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சோதனை தரத்தை கிரிக்கெட் வாரியம் மேம்படுத்தி வருகிறது.
புதிய விதியின்படி, வேகப்பந்துவீச்சாளர்கள் 2 கி.மீ தூரத்தை 8.15 நிமிடத்திலும், விக்கெட் கீப்பர்கள், பேட்ஸ்மேன்கள், ஸ்பின்னர்கள், 8.30 நிமிடத்திலும் கடக்க வேண்டும். யோ யோ லெவல் சோதனைக்கான அளவு 17.1 என்ற அளவிலேயே நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மூன்று கட்டமாக (பிப்ரவரி, ஜூன், ஆகஸ்ட்/செப்டம்பர்) இந்த சோதனை நடத்தப்படும். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் வைத்து, பி.சி.சி.ஐ உறுப்பினரின் மேற்பார்வையில் இந்த சோதனை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய விதி குறித்து, ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டது. இதற்கு பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஒப்புதல் அளித்துவிட்டனர்.