`நான் ரெடி..!- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் இவரா?
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, சர்வதேச அளவில் சரியான தலைமை இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஆரோன் பின்ச், `கேப்டன் பதவி கொடுக்கப்பட்டால் நான் பொறுப்பை ஏற்கத் தயார்’ என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் டெஸ்ட் தொடர் நடந்தது. இந்தத் தொடரின் போது ஆஸ்திரேலிய வீரர் பேங்க்ராஃப்ட், விதிகளுக்கு புறம்பாக பந்தைச் சேதப்படுத்தினார் என்பது தெரியவந்தது.
இதற்கு அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் உடந்தையாக இருந்தனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மூவருக்கும் குறுகிய காலம் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை விதித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.
இதனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சரியான தலைமை இல்லாமல் தவித்து வருகிறது. இந்நிலையில் அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஆரோன் பின்ச், கேப்டன் பதவி வகிப்பதில் தனது விருப்பம் குறித்து தெரிவித்துள்ளார்.
பின்ச் கூறுகையில், `என்னை நோக்கி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை வகிக்குமாறு பணிக்கப்பட்டால், நிச்சயம் நான் அதற்கு தயாராகவே இருப்பேன். ஆனால், உண்மையில் அதைப் பற்றியெல்லாம் நான் யோசிக்கவில்லை.
ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி சற்று தடுமாறித்தான் இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு பதிலாக வரும் அடுத்த வீரர்கள் கண்டிப்பாக சிறப்பாக விளையாடுவார்கள் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com