மதுரையில் புதிய கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..
மதுரை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் புதிதாக ஒரு சிலருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால், இருதினங்களாக 25, 30 பேருக்கு தொற்று பாதித்துள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா, தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவத் தொடங்கியது. மாநிலம் முழுவதும் தினமும் 5 ஆயிரம், 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்து பெரும் பீதியை ஏற்படுத்தியது. தினமும் 200, 300 பேர் இந்த நோய்க்குப் பலியாயினர். கடந்த அக்டோபர் மாதத்திற்கு பிறகு குறையத் தொடங்கியது. தற்போது தினமும் புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தாலும், நோய் பரவல் முழுமையாகக் கட்டுப்படவில்லை.
மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் தினமும் 500க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பாதித்து வருகிறது. தமிழக அரசு நேற்று(ஜன.22) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, 62 ஆயிரம் பரிசோதனைகள் செய்ததில் புதிதாக 574 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களை சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 33,585 ஆக உயர்ந்தது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 689 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 16,205 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 8 பேர் பலியானார்கள்.
இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,307 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5073 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். தினமும் சராசரியாக 700 பேர் குணம் அடைந்து வருவதாலும், புதிய பாதிப்பு 600க்கு கீழ் குறைந்து வருவதாலும் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று புதிதாக 155 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 58 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 32 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 55 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 32 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மதுரை, சேலம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த வாரத்தில் புதிய பாதிப்பு 15க்கும் குறைவாகக் காணப்பட்டது. ஆனால், கடந்த 2 நாட்களாக மதுரையில் புதிய பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம்(ஜன.21) புதிதாக 23 பேருக்கும், நேற்று புதிதாக 30 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் புதிதாகத் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15க்கும் கீழ் குறைந்துள்ளது.