நீட் தேர்வின் பின்னணியில் வியாபாரம்.. படமான உண்மை சம்பவம்..
நீட் தேர்வின் பின்னணியில் உள்ள அரசியல் விளையாட்டை தோலுரிக்கும் உண்மைக் கதையின் அடிப்படையில் உருவாகியுள்ளது இபிகோ 306 திரைப்படம். இப்படத்தைக் கதை எழுதி இயக்கியுள்ளார் டாக்டர் சாய். படத்தைச் சாய் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சிவக்குமார் தயாரித்துள்ளார். படத்தில் தாரா பழனிவேல், சீனு மோகன் மற்றும் டாக்டர் சாய் நடித்துள்ளனர். படத்திற்குச் சூரிய பிரசாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு செல்லப் பா. எடிட்டிங் ஸ்ரீ ராஜா. ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ் நித்ய ஸ்ரீ, பிரபல பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகன் வாசுதேவ் கிருஷ்ணா பாடல்களைப் பாடியுள்ளனர்.
படத்தின் கதை என்ன தெரியுமா? திருச்சி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் கோடீஸ்வரி 12ம் வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறுகிறார். மருத்துவக் கனவுடன் நீட் தேர்வை எதிர்கொள்கிறார். 12ம் வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வில் வெற்றி பெறாததால் அவருக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை. அப்போது தான் அவர் நீதிமன்றத்தை அணுகுகிறார். ஊடக உதவியையும் நாடுகிறார். இவற்றையெல்லாம் தனக்கு சாதகமாக்கி கொள்ளும் உள்ளூர் அரசியல்வாதி எப்படி மொத்த பிரச்சினையையும் அரசியலாக்குகிறார்? நீட் எப்படி ஒரு செல்வம் கொழிக்கும் தொழிலாக மாறுகிறது? கோடீஸ்வரிக்கு நியாயம் கிடைக்கிறதா? என்பது தான் கதை.
இப்படத்தின் இயக்குநர் சாய் அடிப்படையில் ஒரு மருத்துவர். இக்கதையை அவர் மருத்துவம் படிக்கும் காலத்திலேயே எழுதி படத்தையும் இயக்கினார். மருத்துவக் கல்லூரியில் சேரும் ஜூனியர்கள் சொன்ன உண்மைப் போராட்டக் கதைகளின் அடிப்படையில் படத்திற்கு உணர்வைச் சேர்த்துள்ளார்.2014ல் சாய் தனது குறும்படத்திற்காக தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சில காலம் மருத்துவராகப் பணியாற்றிய சாய் தனது கனவுத் தொழிலாளான சினிமாவுக்குத் திரும்பியுள்ளார்.இபிகோ 306 மூலம் இயக்குநராக கால்பதித்திருக்கிறார். இப்படத்தைக் கடந்த 25 ஆண்டுகளாகக் கல்வியாளராக இருக்கும் சிவக்குமார் தயாரித்திருக்கிறார்.படத்தில் கோடீஸ்வரி கதாபாத்திரத்தில் தாரா பழனிவேல நடித்துள்ளார். இவரது நடிப்பை சென்சார் வாரியமே பாராட்டியதாகத் தெரிகிறது. இயக்குநர் டாக்டர் சாய் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக இப்படத்தைப் படக்குழு ஓடிடி தளத்தில் வெளியிடுகிறது. இப்படம் எம்எக்ஸ் பிளேயரில் வெளியாகி உள்ளது. இப்படத்தில் 'ஆரிரோ பாடவா' என்ற உருக்கமான பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை பிரபல பின்னணிப் பாடகர் உன்னிக் கிருஷ்ணனின் மகன் வாசு தேவ் கிருஷ்ணன் பாடியிருக்கிறார்.இத்திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் இடம்பெற்று 4 விருதுகள் பெற்றுள்ளது. கொல்கத்தா தாகூர் சர்வதேச திரைப்படத் திருவிழாவில் இப்படம் இடம்பெற்று டாக்டர் சாய்க்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதைப் பெற்றுத்தந்து. ஆம்ஸ்டர்டாம் திரைப்பட விழாவிலும் விருது வென்றுள்ளது. ஈரானிய திரைப்படத் திருவிழாவில் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. மேலும், இத்திரைப் படம் தமிழ்நாடு சர்வதேசத் திரைப்படத் திருவிழாவிலும் அதிகாரப்பூர்வ தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.