சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு குறைகிறது.. மருத்துவர்கள் தகவல்..

அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தார். அவர் வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளார். இதற்கிடையே, அவருக்குக் கடந்த 20ம் தேதி மாலையில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள போரிங் லேடி கர்சான் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சசிகலாவுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்சனை மற்றும் சளி, காய்ச்சலாலும் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது. அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், ஆக்சிஜன் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை டீன் மனோஜ் தெரிவித்தார்.

இதன்பிறகு, சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும், அவருக்கு ஆர்.டி. பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்ததில் அந்நோய்த் தொற்று பாதிக்கவில்லை என்று தெரியவந்தது.ஆனால், பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் செய்ததில் கொரோனா தொற்று பாதிப்புள்ளதாகத் தெரிய வந்தது. இதையடுத்து, அவர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குச் சர்க்கரை நோய் உள்ளதாலும், சுவாசிக்கத் திணறுவதாலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று அந்த மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ரமேஷ் கண்ணா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு டாக்டர் ரமேஷ் கண்ணா, பெங்களூரு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ஜெயந்தி ஆகியோர் ஒரு மருத்துவ அறிக்கை வெளியிட்டனர். அதில், சசிகலாவுக்கு ரத்த அழுத்தம், ஆக்சிஜன் உள்ளிட்டவை நார்மலாக உள்ளதாகக் கூறியுள்ளனர். அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது என்றும் கூறியுள்ளனர். மேலும், சசிகலா வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்வதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, அவரை மணிப்பால் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்ற அவரது குடும்பத்தினரின் கோரிக்கையைச் சிறை நிர்வாகம் ஏற்கவில்லை.

More News >>