8 வயது குழந்தையை தவிக்க விட்டு ஓட்டம் கள்ளக் காதலனுடன் இளம்பெண் கைது பிரபல நடிகையையும் ஏமாற்ற முயன்றவர்
8 வயது குழந்தையை வீட்டில் தவிக்க விட்டு இளம்பெண் போன் மூலம் பழக்கமான கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட இந்த நபர் பிரபல நடிகை பூர்ணாவையும் ஏமாற்ற முயன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலம் திரூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள திரூர் என்ற இடத்தை சேர்ந்த 27 வயதான இளம்பெண் தான் தன்னுடைய 8 வயதான குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
இவருக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன் போன் மூலம் திருச்சூர் வாடானப்பள்ளி என்ற இடத்தை சேர்ந்த ஹாரிஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளுக்கு நாள் இவர்கள் போனிலேயே காதலை வளர்த்து வந்தனர். வாட்ஸ்அப், பேஸ்புக் உட்பட சமூக இணையதளங்கள் மூலம் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்து வந்தனர். இந்த விவரம் அந்த இளம் பெண்ணின் கணவருக்குத் தெரியாது. இந்நிலையில் கடந்த வாரம் இந்த இளம்பெண் திடீரென வீட்டிலிருந்து மாயமானார். செல்லும் போது அவரது தம்பியின் மனைவியிடம் இருந்து 15 பவுன் நகைகளையும் வாங்கி விட்டு சென்றுள்ளார். அவரது கணவர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் அந்த இளம்பெண் ஹாரிசுடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் ஹாரிசுக்கு வலை விரித்தனர். ஆனால் இருவரும் எங்கு இருக்கிறார்கள் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் எர்ணாகுளம் அருகே ஆலுவா என்ற இடத்தில் ஹாரிசின் உறவினர் ஒருவரின் வீட்டில் அந்த இளம்பெண் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் திருச்சூரில் வைத்து ஹாரிசையும் போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் இருவரும் திரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது சிறுவர் நல சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹாரிஸ் இதேபோல பல இளம்பெண்களை ஏமாற்றி நகைகளைப் பறித்துள்ளார். இவர் பிரபல நடிகை பூர்ணாவையும் திருமணம் செய்வதாகக் கூறி மோசடி செய்ய முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.