ஆஸ்திரேலியாவில் அபார ஆட்டம் 6 இந்திய புதுமுக வீரர்களுக்கு மஹிந்திராவின் தார் பரிசு
ஆஸ்திரேலியாவில் அபாரமாக ஆடி அந்நாட்டு அணியை தோற்கடித்த இந்திய அணியில் இடம்பெற்ற வாஷிங்டன் சுந்தர், நடராஜன் உள்பட 6 புதுமுக வீரர்களுக்கு மஹிந்திரா நிறுவனம் அதிரடி பரிசு அறிவித்துள்ளது. தங்களுடைய புதிய எஸ்யுவி வாகனமான 'தார்' அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில், மண்ணை கவ்வ வைத்த இந்திய அணியின் சமீபத்திய சரித்திர வெற்றியை யாராலும் மறக்க முடியாது. இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த 6 புதுமுக வீரர்களுக்கு மஹிந்திரா வாகன நிறுவனம் தங்களுடைய புதிய எஸ்யுவி வாகனமான 'தார்' பரிசளிப்பதாக அறிவித்துள்ளது. இந்த தகவலை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியது: அசாத்தியம் என்று கருதும் எதையும் சாத்தியமாக்கலாம் என வரும் தலைமுறைக்கு இந்த புதுமுக வீரர்கள் காண்பித்துக் கொடுத்துள்ளனர். வாழ்க்கையின் எல்லா கட்டத்திலும் இந்த சாதனை அனைவருக்கும் ஊக்கத்தை அளிக்கும். இது எனக்குத் தனிப்பட்ட முறையில் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
அதனால் தான் இந்திய அணியில் புதுமுக வீரர்களான முகமது சிராஜ், ஷார்துல் தாக்கூர், சுப்மான் கில், நடராஜன், நவ்தீப் செய்னி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு எங்களது புதிய தார் வாகனத்தை பரிசளிக்க தீர்மானித்துள்ளோம். இந்த பரிசுகளை வழங்குவதின் மூலம் எங்களது நிறுவனத்திற்கு செலவு எதுவும் கிடையாது. இளைஞர்கள் தங்கள் மீது நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த பரிசுகளை வழங்கத் தீர்மானித்துள்ளோம். இந்த 6 பேருக்கும் எங்களுடைய நிறுவனத்தில் சார்பில் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஆனந்த் மகேந்திரா தன்னுடைய டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.