தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கு கீழ் சரிவு..
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. சீன வைரஸ் நோயான கொரோனா, தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவத் தொடங்கியது. மாநிலம் முழுவதும் தினமும் 5 ஆயிரம், 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்து பெரும் பீதியை ஏற்படுத்தியது. தினமும் 200, 300 பேர் இந்த நோய்க்கு பலியாயினர். கடந்த அக்டோபர் மாதத்திற்கு பிறகு குறையத் தொடங்கியது. தற்போது தினமும் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தாலும், நோய் பரவல் முழுமையாக கட்டுப்படவில்லை. மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் தினமும் 500க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதித்து வருகிறது.
தமிழக அரசு நேற்று(ஜன.23) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, 63 ஆயிரம் பரிசோதனைகள் செய்ததில் புதிதாக 586 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்களை சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 34,171 ஆக உயர்ந்தது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 673 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 16,878 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 2 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,309 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4984 பேராக குறைந்துள்ளது.
தினமும் சராசரியாக 700 பேர் குணம் அடைந்து வருவதாலும், புதிய பாதிப்பு 600க்கு கீழ் குறைந்து வருவதாலும் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 5000க்கும் கீழ் சென்றுள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 153 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 51 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 26 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 47 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 24 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 26 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மதுரை, சேலம், மாவட்டங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிய பாதிப்பு அதிகரித்தது. நேற்று 12, 16 பேருக்கு தான் தொற்று பாதிக்கப்பட்டிருந்தது. மற்ற மாவட்டங்களில் புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15க்கும் கீழ் குறைந்துள்ளது.