உயிருக்கு ஆபத்து: சினிமா ஒளிப்பதிவாளர் மீது நடிகை புகார்..
பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை சில நடிகைகள் மீ டூ விவாகாரத்தில் சில நடிகர்கள், இயக்குனர்கள் மீது புகார் கூறினார். தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் விஷால் உடன் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருப்பதுடன் தமிழில் பொம்மலாட்டம், காலா போன்ற படங்களில் நடித்திருக்கும் நடிகர் நானா படேகர் மீது மீ டூ புகார் கூறினார். மேலும் போலீஸில் புகார் அளித்தார். போதிய ஆதாரம் இல்லை என்று சொல்லி அந்த புகார் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் திடீரென்று தனுஸ்ரீ தத்தா வெளிநாடு சென்று பல மாதங்கள் கழித்து திரும்பி வந்தார். அப்போது பேட்டி அளித்த அவர், தனக்கு நானா படேகர் ஆட்கள் மூலமாக மிரட்டல் வந்ததுடன் எனது குடும்பதாருக்கும் மிரட்டல் வந்தது. எனவேதான் வெளிநாடு சென்றுவிட்டேன்.
நான் செய்த புகாரின் பேரில் எனக்கு நீதி கிடைக்கவில்லை என்றார். சில மாதங்களுக்கு முன் இவரைப்போலவே இந்தி நடிகரும் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவருமான அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் மீ டு புகார் அளித்தார். தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து என்னை பலவந்தப்படுத்த முயன்றார். அவரை தள்ளி விட்டு நான் தப்பி வந்தேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளித்தார். அதை அனுராக் மறுத்தார். நான் தவறாக நடந்ததாக என் மீது பாயல் கூறும் குறிப்பிட்ட நாளில் நான் இந்தியாவில் இல்லை. இலங்கையில் படப்பிடிப்பில் இருந்தேன். என் மீது பொய் புகார் கூறி இருக்கிறார் என்றார். போலீஸ் நிலையத்துக்கு சென்றும் விசாரணைக்கு ஆஜராகி பதில் அளித்தார்.
இதுபோன்ற ஒரு சம்பவத்தில் டோலிவுட் நடிகை சாய் சுதா என்பவர் பிரபல ஒளிப்பதிவாளர் மீது தற்போது புகார் அளித்திருப்பதுடன் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜூன் ரெட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் சாய் சுதா. இவர் கடந்த 2020ம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு மீது புகார் அளித்தார். என்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டார் என்று அவர் புகாரில் குறிபிட்டிருந்தார். இதையடுத்து போலீசார் ஷியாமை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விரிவான விசாரணை நடத்தினர். ஆனால் சில சம்பவங்களுக்கு பிறகு சாய் சுதா தான் போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெற்றார். இந்த பிரச்னை சில காலம் அமைதியாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் பரபரப்பாகி இருக்கிறது.
ஷியாம் மீது சாய் சுதா மீண்டும் புகார் அளித்திருக்கிறார். அதில், ஏற்கனவே நான் அளித்த புகரை வாபஸ் பெறும் படி என்னை ஷியாம் ஆட்கள் வற்புறுத்தினார்கள் இல்லாவிட்டால் அதற்கான விளைவுகளை நீயும் உன் குடும்பமும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்று மிரட்டினார்கள். இதனால் எனது உயிருக்கும் என் குடும்பதாருக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. மேலும் என்னை ஆபாசமாக திட்டி, உடல் ரீதியாக தாக்கினர்கள் என கூறியிருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷ்யாம் கே நாயுடு தெலுக்கில் பிரபல ஒளிப்பதிவாளர் ஆவார். என் டி பாலகிருஷ்ணா நடித்த டிக்டேடர், பிரபாஸ் நடித்த புஜ்ஜிகாடு, ராம் சரண் நடித்த சிறுத்தா, மகேஷ் பாபு நடித்த போக்கிரி உள்ளிட்ட பலவேறு படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.