காஜல் அகர்வால் ரெடி, தயாரிப்பாளர் ரெடி இல்லை..
திரையுலகில் ஹீரோயின்களுக்கு திருமணம் ஆகாமலிருந்தால்தான் மவுசு. திருமணம் ஆகிவிட்டால் பட வாய்ப்புகள் காணாமல் போய்விடும் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. நடிகைகள் அசின், ஜெனிலியா, நஸ்ரியா நாசிம், பாவனா, நவ்யா நாயர், ஸ்ரேயா, எமி ஜாக்ஸன், சமந்தா, பிரியாமணி என சில ஹீரோயின்கள் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் நடித்து வந்தனர். ஒரு மொழியில் படங்கள் இல்லாத நிலையிலும் வேறு மொழியில் வாய்ப்பு பெற்று வந்தனர். இதெல்லாமே அவர்கள் திருமணம் செய்வதற்கு முன்பு இருந்த நிலை, திருமணம் முடிந்தவுடன் அவர்களிடம் கால்ஷீட்டுக்காக சுற்றி வந்த தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விட்டனர். இவர்களில் அசின், நஸ்ரியா போன்றவர்கள் கவுரவமாக நடிப்பிலிருந்து விலகி இருந்தாலும் மற்றவர்கள் வாய்ப்பு வந்தால் நடிக்கத் தயாராக இருக்கிறார்கள். இந்த பட்டியலில் சமீபத்தில் இணைந்து விட்டார் காஜல் அகர்வால்.
திருமணத்துக்கு முன்பு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். கமல்ஹாசனுடன் இந்தியன் 2, சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா என ஒப்பந்தம் ஆகி இருந்தார். இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொண்டு கமலுடன் நடித்து வந்தார். அப்போது படப்பிடிப்பில் நடந்த கிரேன் விபத்து அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் அதன் படப்பிடிப்பு தடைபட்டது. அதைத் தொடர்ந்து கொரோனா லாக் டவுனில் ஷூட்டிங் தடைபட்டு நின்றது மீண்டும் தொடங்கிய பாடில்லை. இந்த இடைவெளியில் காஜலுக்கு கவுதம் கிட்ச்லுவுடன் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்துக்கு பிறகு நடிப்பீர்களா என்று திருமணம் செய்யவிருக்கும் நடிகைகளிடம் கேட்கும்போது கணவரின் விருப்பத்தை பொருத்து முடிவு செய்வேன் என்று வழக்கமாக பதில் அளிப்பார்கள். ஆனால் காஜல் விஷயத்தில் அப்படி இல்லை. திருமணத்துக்கு முன்பே அவர் வெளியிட்ட மெசேஜில் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன். கவர்ச்சியாக நடிக்க கட்டுப்பாடு எதுவும் விதிக்க மாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்தார்.
ஆனால் திருமணத்துக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்பு எதுவும் தேடி வரவில்லை. ஏற்கனவே பேச்சு வார்த்தையில் இருந்த ஓரிரூ பட வாய்ப்புகள் மட்டுமே அவரால் தக்க வைக்க முடிந்தது. புதிதாக பட வாய்ப்புகள் அவரை தேடி வரவில்லை. தற்போது இந்தியன் 2, ஆச்சார்யா ஆகிய 2 படங்களில் நடிக்கிறார் காஜல். இதில் இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எபோது என்று தெரியவில்லை. ஆச்சார்யா படம் வெளியாகி வரவேற்பு பெற வேண்டும் என்ற சூழலில் இருக்கிறார் காஜல் அகர்வால். தற்போது திரிஷா, நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளன. அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் படங்களில் நடிப்பதுடன் இன்னும் சில படங்களில் நடிப்பது பற்றி பேசி வருகிறார் நயன்தாரா. நடிகை திரிஷா தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருவதுடன் மேலும் சில படங்களில் நடிக்க பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறார்.