என்னைத்தவிர யாருடனும் பரிவர்தனை செய்தால் நான் பொறுப்பல்ல.. பிரபல இசை அமைப்பாளர் வக்கீல் நோட்டீஸ்..
நடிகர் விஷ்ணு விஷால் பெயரை பயன்படுத்தி கடந்த ஒரு மாதத்துக்கு முன் இணையதளத்தில், புதிய படத்தில் நடிக்க பெண்கள் தேவை என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த விஷ்ணு விஷால் உடனடியாக அதற்கு விளக்கம் அளித்தார். என் பெயரில் யாரோ மோசடியாக நடிக்க பெண்கள் தேவை என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள். நான் தற்போது எனது சொந்த தயாரிப்பில் மட்டுமே நடித்து வருகிறேன் வெளி நிறுவனம் எதிலும் நடிக்கவில்லை. அப்படி ஒரு விளம்பரத்தை நான் தரவில்லை. என் பெயரில் வரும் இதுபோன்ற மோசடிகளை கண்டு பெண்கள் ஏமாற வேண்டாம் எச்சரிக்கையாக இருங்கள் என்று விளக்கம் அளித்தார். இதுகுறித்து போலீசிலும் புகார் அளித்தார். அதேபோல் நடிகர் அஜீத்குமார் கடந்த ஆண்டு ஒரு எச்சரிக்கை தகவலை வழக்கறிஞர் மூலமாக வெளியிட்டார். என் பெயரை செல்லி யாராவது அணுகினால் அதற்கு நான் பொறுப்பு கிடையாது.
எனது பிரதிநிதியாக பி ஆர் ஓ சுரேஷ் சந்தரா மட்டுமே இருக்கிறார். அவரை தவிர வேறு யாருடனும் எனது விஷயங்கள் குறித்து ஆலோசிப்பது என்னை கட்டுப்படுத்தாது என்று அறிவித்தார். அந்த பாணியில் தற்போது இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒரு சட்ட விளக்கம் அளித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பதில் மட்டுமல்ல, பட தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார். எலன் இயக்கிய ஹரிஷ் கல்யாணின் பியார் பிரேமா கதால் திரைப்படத்தின் மூலம் முதல் படம் தயாரித்தார் யுவன் சங்கர் ராஜா. இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, இது யுவனின் தயாரிப்பில் வெற்றிகரமான தொடக்கமாக அமைந்தது. சமீபத்திய தகவல் என்னவென்றால், யுவன் சங்கர் ராஜா தனது தயாரிப்பு நிறுவனத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் ஒரே அங்கீகரிக்கப்பட்ட நபர் தான் மட்டும்தான் என்பதை தெளிவுபடுத்தும் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும்போது, நான் நேரடியாக பங்கேற்பதில் ஈடுபடாத என் தொடர்பான எந்தவொரு பரிவர்தனைக்கும் நான் பொறுப்பு கிடையாது என குறிபிட்டிருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் பிரைவேட் லிமிடெட் மற்றும் யு 1 ரெக்கார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பாக எந்த வொரு பரிவர்த்தனையையும் கையாள ஒரே அங்கீகாரம் பெற்ற நபர் நான் மட்டும் தான் என்பதை வெளிப்படுத்தும் ஒரு இடுகையைப் பகிர்ந்துள்ளார். அந்த அறிவிப்பில் கூறும் போது, “எனது நிறுவனம் ஒய்.எஸ்.ஆர் பிரைவேட் லிமிடெட் & யு 1 ரெக்கார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பாக, என் தொடர்பான எந்தவொரு பரிவர்த்தனையும் பெறவோ அல்லது தலையிடவோ யாரையும் நான் அங்கீகரிக்கவில்லை. பணம் அல்லது ஒப்பந்தம் எதற்கும் இது பொருந்தும். எந்தவொரு பரிவர்த்தனையும் நான் இல்லாமல் நடந்தால் அல்லது நடந்திருந்தால் நான் அதற்கு பொறுப்பேற்க மாட்டேன். எனது நிறுவனமான ஒய்.எஸ்.ஆர் பிரைவேட் லிமிடெட் & யு 1 ரெக்கார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை பிரதிநிதித்துவப் படுத்த என்னைத் தவிர வேறு எந்த நபருக்கும் அதிகாரம் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.